சென்னை, மார்ச். 29 –
சென்னை கலைஞர் நகர், இராணி அண்ணா நகர் குடியிருப்பு பகுதி பூங்காவில் உள்ள மரம் ஒன்றில் கடந்த நான்கு நாட்களாக காகம் ஒன்று நூலில் சிக்கி தவித்து வந்துள்ளது.
மேலும் அம்மரத்தின் கீழ் பகுதியில் கிணறும் இருந்ததால் அப்பகுதியினர் அக் காகத்தை மீட்பதில் சிரமம் இருந்து வந்தது. இந் நிலையில் இன்று அவ்வழியாக ரோந்து பணிக்கு கலைஞர் நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செளந்தரராஜன், தலைமை காவலர் நாராயணன் உடன் சென்றுவுள்ளார். அப்போது அங்கிருந்த சிறுவர்கள் இது குறித்து தெரிவிக்க உடனடியாக காவலர்கள் அவசர கட்டுபாட்டு மையத்திற்கு தொடர்புக்கொண்டு தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மேலும் தகவல் கிடைத்து உடனடியாக அசோக் நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து ஏணி உதவியுடன் மரத்தில் சிக்கியிருந்த காகத்தை மீட்டு அதன் உடலில் சுற்றியிருந்த நூலினையும் அகற்றி வானில் பாதுகாப்பாக பறக்க விட்டனர்.
மேலும் இச்சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் காகத்திடமும் கனிவு காட்டிய காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினரை வெகுவாக பாராட்டினார்கள்.






















