கபிஸ்தலம், மார்ச். 13 –
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் பங்களா தெருவில் வசிப்பவர் ஆறுமுகம், மேலும் இவர் அப்பகுதியில் காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
மேலும் இவருக்கு, திருமணம் ஆகி 3 பெண் குழந்தைகள், 8 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆண் பிள்ளைகள் யாருக்கும் இன்னும் திருமணமாகவில்லை எனத் தெரியவருகிறது.
இவரது மகன்களில் 36 வயதுடைய ராஜா என்பவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டும் பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் ராஜாவிற்கும் அவரது தம்பியான 27 வயதுடைய முருகேந்திரன் என்பவருக்கும் நேற்று முன் தினம் இரவு குடிபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது ஒருக்கட்டத்தில் கைகலப்பாக மாறிய நிலையில் ஆத்திரம் அடைந்த ராஜாவின் தம்பி முருகேந்திரன் செங்கல்லால் ராஜாவின் தலையில் அடித்துள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தாக கூறப்படுகிறது.
இவ் உண்மை சம்பவத்தை மறைத்து ராஜா வீட்டில் இருக்கும் போது கீழே விழுந்து இறந்து விட்டார் என வீட்டில் உள்ளவர்கள் கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளனர். அதன் அடிப்படையில் கபிஸ்தலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் உயிரிழந்த ராஜாவின் உடல் கூறாய்வின் போது அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் அதிகாரிகளிடம் மருத்துவர் கூறியதன் அடிப்படையில் ஆய்வாளர் அனிதா கிரேசி, உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்ட மறு விசாரணையின் போது, இறந்த ராஜாவின் தம்பி முருகேந்திரன் தான் செங்கல்லால் அடித்து கொலை செய்தார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து, ராஜாவின் தம்பி முருகேந்திரனை போலீசார் கைது செய்தும், கொலை வழக்கு பதிவு செய்தும், மேலும் தொடர் விசாரணையை மேற் கொண்டு வருகின்றனர். அண்ணனையே தம்பி அடித்து கொலை செய்து அதனை மறைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது.





















