கும்பகோணம், ஜன. 22 –
கும்பகோணம் அருகே உள்ள செருகடம்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சுமார் 44 வயது மதிக்கத்தக்க மாரியப்பன் என்பவர். மேலும் இவர் அப்பகுதியில் பம்பு வேலை செய்யும் தினக் கூலி தொழிலாளி என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தினக்கூலித் தொழிலாளியான மாரியப்பன் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் பழைய டைமண்ட் தியேட்டர் சந்திப்பில் உள்ள ஒரு மருந்து கடையில் மருந்து வாங்க வந்துள்ளார்.
அப்போது, அந்த மருந்து கடை வாசலில் அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு, கீழே மயங்கி விழுந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அத்தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மாரியப்பனை பரிசோதித்துப் பார்த்தனர். இதில் மாரியப்பன் உயிரிழந்து விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அச்சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலயறிநத செறுகடம்பூர் பகுதியை சேர்ந்த அவரது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் கூடி மாரியப்பன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் காவல்துறையினர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மருந்து கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிழக்கு காவல்துறை ஆய்வாளர் அழகேசன் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாரியப்பன் இறப்பிற்கு உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து, மாரியப்பனின் உறவினர்கள் முற்றுகைப் போராட்டத்தை கை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
காவல்துறையினர் மாரியப்பனின் உடலை கைப்பற்றி, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் டைமண்ட் தியேட்டர் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் வேறு வழியாக மாற்றி அனுப்பப்பட்டது. மேலும் மருந்து கடைக்கு மருந்து வாங்க வந்த தொழிலாளி மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.