திருவாரூர், டிச. 30 –

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பாக, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் நீர் நுட்ப மையம் கண்காணிப்பு மூலம், வலங்கைமான் பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலங்களுக்கு இலவசமாக ட்ரோன்கள் மூலமாக உரம் தெளிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இயங்கி வரும் வேளாண் அறிவியல் நிலையம் உலக வங்கி நிதி உதவியுடன் விவசாயிகளின் நிலங்களுக்கு தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமாக்கல் திட்டத்தின் படி இலவசமாக ட்ரோன்கள் ( ஆளில்லா வான்கல தெளிப்பான்) மூலமாக  விவசாயிகளின் வயல்வெளிகளில் உரங்களை தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமாக்கல் திட்டத்தின் படி நெல் ,நிலக்கடலை , உளுந்து ,ஆகிய பயிர்களுக்கு விதைகள் உரங்கள் நுன்னூட்டங்கள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தின்படி திருவாரூர் மாவட்டத்தில் 2000 ஏக்கர் பரப்பளவில் நெற் பயிர்களுக்கு தேவையான இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன மேலும் இலவசமாக ட்ரோன்கள் மூலமாக உரம் தெளிக்கும் பணியையும் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல்  நிலையம் செய்து வருகிறது. இதுவரை சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் இலவசமாக விவசாயிகளின் நிலங்களுக்கு ட்ரோன்கள் மூலமாக உரம் தெளித்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள்ளாக ஒட்டுமொத்தமாக 2000 ஏக்கர் பரப்பளவு முழுமைக்கும் இலவசமாக ட்ரோன்கள் மூலமாக உரம் தெளிக்கும் பணி நடைபெற உள்ளதாக தெரிய வருகிறது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் உள்ள வீராணம் பகுதியில் இந்த திட்டத்தில் பதிவு செய்து பயன்பெற்ற விவசாயி ஒருவரின் நிலத்திற்கு தேவையான உரத்தினை ட்ரோன் மூலமாக நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய  ஊழியர்கள் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையின் கீழ் தெளித்துக் கொடுத்தனர்.

தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமாக்கல் திட்டத்தின் முக்கியத்துவம் என்னவென்றால் விவசாயிகள் நீர் மேலாண்மையை திரம்பட  கையாள வேண்டும் என்பதற்காகவும் விவசாயிகளின் செலவுகளை குறைப்பதற்காகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இத் திட்டத்தினை நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மிகவும் சிறப்பாக செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here