காஞ்சிபுரம், டிச. 01 –
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுதும் உள்ள பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பழங்குடியின (இருளர்) மக்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டி தரப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 443 பொருளாதாரத்தில் பின் தங்கிய பழங்குடியின (இருளர்) ஏழை மக்களுக்கு வீடுகள் தயாராகி வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு பகுதியில் 76 வீடுகளும், சிங்காடிவாக்கம் பகுதியில் 100 வீடுகளும், குன்றுகாடு பகுதியில் 58 வீடுகளும், காட்ராம்பாக்கம் பகுதியில் 31 வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உத்திரமேரூர் ஒன்றியம் மலையாங்குளம் பகுதியில் 178 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு வீடும் 269 சதுரடியில் ₹4.62 லட்சத்தில் கட்டப்பட்டு வருகிறது.
கட்டப்பட்டு வரும் வீடுகளில் வீட்டிற்கு ஒரு வரவேற்பு அறை,படுக்கை அறை, சமையலறை மற்றும் கழிப்பிட வசதியுடன் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
மேலும் கட்டப்பட்டு வரும் 178 வீடுகளின் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா ஆய்வுக்கு பின் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.
மேலும் வருவாய்த் துறை மூலம் 178 பழங்குடியின (இருளர்) மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கட்டப்பட்டு வரும் வீடுகளில் அருகிலேயே ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு செங்கல் சூலைகள் மற்றும் மூலிகைப் பண்ணைகள் அமைத்து தரப்படும் என தெரிவித்தார்.
மேலும் வருங்காலத்தில் அவர்களுக்கு தேவையான நியாய விலை கடை மற்றும் அவர்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என தெரிவித்தார்.
மேலும் மலையாங்குளம் பகுதியில் கட்டப்பட்டு வரும் இருளர் இன மக்கள் குடியிருப்பு தமிழகத்திற்கு முன்மாதிரி திட்டமாக அமையும்.
கிராமத்தின் பெயர் பயனாளிகளின் எண்ணிக்கை எலப்பாக்கம் 25 நெல்வேலி 19 ரெட்டமங்கலம் 17 திருமுக்கூடல் 22 தோட்டநாவல் 11
உள்ளிட்ட 18 கிராமங்களை உள்ளடக்கிய இருளர் இன மக்களுக்கு மலையாங்குளத்தில் 178 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசால் 19.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 443 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



















