கும்பகோணம், டிச. 01 –

கும்பகோணத்தில் பாணாதுறை வடக்கு வீதி பகுதியை சேர்ந்தவர் கமலா (வயது 66). இவர் கடந்த ஆண்டு (2021) ஜூலை மாதம் வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் கமலா அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலையத்தில் கமலா புகார் அளித்தார்.

மேலும், இதே நாளில் இரவு மடத்துத்தெரு யானை அடி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த  துக்காம்பாளையம் தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி கற்பகம் (48) கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் பறிக்க முயன்றனர்.

அப்போது, கற்பகம் கத்திக் கூச்சலிட்டத்தை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை சுற்றி வளைத்து பிடித்து  கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கற்பகம் கொடுத்த புகாரின் பேரில் அப்போதைய காவல்துறை ஆய்வாளர் மணிவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே உள்ள களஞ்சியம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சக்தி என்கிற சலீம் (40) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, பச்சை மலையான் கோட்டை பகுதியைச் சேர்ந்த பீருஷா மகன் முகமது நவாஸ் (28) என்பது தெரியவந்தது.

மேலும் இந்த இருவரும் சேர்ந்து கமலா அணிந்திருந்த சங்கிலியை பறித்து சென்றதும் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சலீம் மற்றும் முகமது நவாஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு இன்று குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1வது  நீதிமன்றத்தில் நடைபெற்றது.  இந்த வழக்குகளின் இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி தனது தீர்ப்பில் 2 வழக்குகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்ட சக்தி என்கிற சலீம் மற்றும் முகமது நவாஸ் ஆகியோருக்கு ஒவ்வொரு வழக்குக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூபாய் 10 ஆயிரமும் அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக தலா ஆறு மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here