திருவாரூர், நவ. 28 –
டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும் தென்னக ரயில்வேயை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் கொட்டும் மழையில் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது. இதில் அனைத்து கட்சிகளை சேர்ந்த சுமார் 5000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கொரடாச்சேரியில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் ரயில் மறியல் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டனர்.
கீழ தஞ்சை எனப்படும் திருவாரூர், நன்னிலம், பேரளம், கொரடாச்சேரி, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி நாகப்பட்டினம், வேதாரணியம் பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த பல ரயில் சேவைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பல முறை ரயில்வே துறைக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு நாடாளுமன்றத்தில் பலமுறை கோரிக்கை விடுத்த போதும் ரயில்வே துறையினர் கண்டு கொள்ளவில்லை. எனவும், கூறப்படுகிறது.
இதனையடுத்து இன்று முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அனைத்து கட்சிகள் வர்த்தக சங்கம், பொதுமக்கள், ஒன்றிணைந்து அறிவிப்பு வெளியிட்டனர்.
இதனையடுத்து திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சி, காங்கிரஸ் கட்சி, விவசாய அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், ரயில் உபயோகிப்பாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து கொரடாச்சேரி, முத்துப்பேட்டை, சன்னாநல்லூரில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கிளறியம் மஞ்சகொள்ளை கேட் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு,திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள் இணைந்து மன்னார்குடியில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த பயணிகள் ரயிலை ரயிலை மறித்தனர்.
எர்ணாகுளம் காரைக்கால் விரைவு ரயில் மறைப்பதன் காரணமாக பயணிகள் ரயிலை விடுவித்தனர். இதனிடையே எர்ணாகுளம் விரைவு ரயில் சேவை தற்காலிகமாக தஞ்சாவூர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து பயணிகள் அங்கிருந்து இறக்கிவிடப்பட்டு பயணிகளுக்கு பயண கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்த நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தண்டவாளத்தில் அமர்ந்தவாறே தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரயில்வே துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அதனை தொடர்ந்து ஒரு சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ரயில்வே துறையினர் உறுதி அளித்தனர். இதனையடுத்து கொட்டும் மழையில் நடைபெற்ற தொடர் ரயில் மறியல் போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக முடிவெடுத்தனர். மற்ற கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என அறிவித்தனர்.
இதனைதொடர்ந்து நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது…
கோரிக்கைகளில் ஒன்றான செம்மொழி விரைவு ரயிலை நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து போக்குவரத்து பாதிப்பு காரணமாக மாற்றி கொரடாச்சேரியில் இன்ஜின் மாற்றம் செய்வதற்கு ரயில்வே துறையினர் ஒப்புதல் அளித்ததால் தற்போதைய ரயில் மறியல் போராட்டம் வெற்றி பெற்றது.
இதேபோல் கொரடாச்சேரி மற்றும் பேரளம் நிறுத்தங்களில் அனைத்து விரைவு ரயில்கள் நின்று செல்லும் முத்துப்பேட்டை கீழ்வேளூர் ரயில் நிலையங்களில் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் விரைவு ரயில் நிறுத்துவதற்கு முடிவெடுக்கப்படும் எனவும் மேலும் மீதமுள்ள 30 கோரிக்கைகள் பற்றி ரயில்வே துறையுடன் ஆலோசனைக் கூட்டம் மூலம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என ரயில்வே துறையினர் அறிவித்துள்ளதாக நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு தெரிவித்தார் .
ரயில் மறியல் போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோரை கொட்டும் மழையில் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
பேட்டி : செல்வராஜ் நாகை நாடாளுமன்ற உறுப்பினர்