திருவாரூர், செப். 19 –
திருவாரூர் மாவட்டத்தில் கிராமங்கள் மற்றும் பள்ளிகள் தோறும் காய்ச்சல் தொடர்பான மருத்துவ முகாம்கள் நடத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
பள்ளி மாணவன் உட்பட இருவருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரவலை தடுக்கும் விதத்தில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என ஆட்சியர் காயத்ரி உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த 59 வயது முதியவருக்கும், கொரடாச்சேரி வட்டாரத்தைச் சேர்த்த 10 வயது பள்ளி மாணவருக்கும் பன்றிக்காய்ச்சல் ஆரம்ப நிலை அறிகுறி தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் உரிய சிகிச்சை வழங்கப்பட்டு தற்போது நலமுடன் வீடு திரும்பி உள்ளனர்.
மேலும் இக் காய்ச்சல் குறித்து மாவட்டம் முழுவதும் குழுக்கள் அமைக்கப்பட்டு கிராமங்கள் மற்றும் பள்ளிகளில் கணக்கெடுப்பு நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு பிரத்யேகமாக 10 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் அவர்கள் இருவர் தவிர தற்போதுவரை பன்றிக்காய்ச்சல், டெங்கு போன்ற அறிகுறிகளுடன் வேறு யாரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை. என்பது குறிப்பிட தக்கது.
மேலும் இதுப்போன்ற அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும், மருந்து மாத்திரைகள் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் அனைத்துவித முன்னேற்பாடுகளையும் படு தீவிரமாக செய்து வருகிறது.






















