கும்பகோணம், செப். 08 –

திராவிடமாடல் ஆட்சி என்பது வெறும் வசனம் மட்டுமே நிறைந்த ஆட்சி எனவும் மேலும் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் குறைவாகயிருந்தாலும் எதிர்கட்சியாக இருந்து திமுக அரசை செயல் பட வைப்பது பாமகதான் எனவும் கும்பகோணத்தில் நேற்று நடைப்பெற்ற கூட்டத்தில் பாமக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி உரை நிகழ்த்தினார்.

மேலும் அவர் பேசுகையில், திராவிட மாடல் ஆட்சி என்பது அதிமுக உள்ளடக்கியதா என்பதை திமுக விளக்க வேண்டும், என்றும் அவர் கேள்வியெழுப்பினார். தொடர்ந்து கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க எனது தலைமையில் போராட்டம் நடைபெறும் என்றும் அதற்கு முன்னரே கும்பகோணத்தை மாவட்டமாக அறிவித்துவிடுங்கள் எனவும் அவர் தமிழக ஆரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் தோணியில் உரை நிகழ்த்தினார்.

மேலும் உணவு பற்றாக்குறையை போக்க உணவு பாதுகாப்பு சேமிப்பு கிடங்குகள் ஏற்படுத்த வேண்டும், தாயை பாதுகாப்பது போல் காவிரியாற்றையும் பாதுகாக்க வேண்டும், உலகிலேயே சிறந்த சமவெளி பகுதியாக உள்ள நமது டெல்டா பகுதியை நாம் முறையாக பாதுகாக்க வேண்டும்.

கடந்த இரண்டு மாதங்களில் 240டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது. கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை சேமிக்க இதுவரை எந்த திட்டமும் அரசிடம் இல்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார். இதனைத் தடுத்திட அதிகளவில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். நீர் மேலாண்மை முதலீடு செய்ய வேண்டும் என தமிழக முதல்வரிடம் தான் பலமுறை கோரிக்கை வைத்துள்ளதாகவும் அப்போது தெரிவித்தார்.

பாமக ஆட்சியில் தற்போது இருந்திருந்தால் நிச்சயமாக 1 லட்சம் கோடி நீர் மேலாண்மைக்காக முதலீடு செய்து இருப்பேன். ஆனால், வாக்கை விலை கொடுத்து வாங்குவதுதான் திராவிட மாடல், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவது பாமக தான், எம் எல் ஏக்கள் எண்ணிக்கையில் வேண்டுமானால் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படலாம் அரசை செயல்பட வைத்து எதிர்க்கட்சியாக இருப்பது பாமக தான் என அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவிலேயே நீட் தேர்வுக்கு எதிராக தற்கொலை செய்து கொள்வது தமிழகத்தில் தான் அதிகம். இதனை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும், நீட் தேர்வு என்பது அராஜகம், திராவிட மாடலில் வசனம் மட்டுமே நிறைந்துள்ளது, டெல்டா பகுதியில் அதிகளவில் கொலை நடந்து வருகிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள இளைஞர்களை மீது மது மற்றும் சூது போன்ற மும்முனை தாக்குதல் நடந்து வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை தமிழகத்தில் 28பேர் தற்கொலை செய்து உள்ளனர். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்ய குழு அமைக்கப்பட்டும் இதுவரை தடை செய்யாதது ஏன் என வினா எழுப்பினார்.

போதை தடுப்பு பிரிவில் 1000க்கும் குறைவான போலீசாரே உள்ளனர். அதிகளவில் போதை தடுப்பு பிரிவில் போலீசார் நியமனம் செய்து போதை பொருட்களை தடை செய்ய வேண்டும் அண்ணா பிறந்த நாளுக்கு முன்னரே கும்பகோணத்தை மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும் என அவர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

கும்பகோணம் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜோதிராஜ் தலைமை தாங்கினார். உழவர் பேரியக்க மாநில  தலைவர் ஆலயமணி, பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலின், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜசேகர், ஆகியோர் முன்னிலை வைத்தனர். அனைவரையும் மாவட்ட தலைவர் அமிர்த.கண்ணன் வரவேற்றார்.

கூட்டத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம், சமூக நீதிப்பேரவை, இளைஞர் அணியினர், மாணவர் அணியினர், சார்பு அணி நிர்வாகிகள் தொழிற்சங்கத்தினர் உழவர் பேர் இயக்கத்தினர், மகளிர் அணியினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாநகர செயலாளர் குமார் நன்றி கூறினார். முன்னதாக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு அணைக்கரையில் மாவட்ட தலைவர் அமிர்த கண்ணன், மாவட்ட செயலாளர் ஜோதிராஜ் ஆகியோர் தலைமையில் வெடி வெடித்து பிரமாண்டமான வரவேற்பை அன்புமணி ராமதாஸூக்கு அளித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here