கும்பகோணம், ஆக. 21 –
கும்பகோணம் அருகே உள்ள இன்னம்பூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் பலநாட்களாக வீணாகி வருகிறது. அதனை சரிப்படுத்த வலியுறுத்தி, அவ்வூராட்சி தலைவர் உயர்மட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் தெரிவித்தும் அதுக்குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்கள் இந்நாள் வரை அலட்சிய போக்கினை கடைப்பிடித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குடிதாங்கி கொள்ளிடத்தில் இருந்து கும்பகோணம் நகரத்திற்கு தேவையான குடிநீர் அங்கிருந்து எடுக்கப்பட்டு திருப்புறமையம், இன்னம்பூர், புளியஞ்சேரி, கொட்டையூர், வழியாக கும்பகோணம் நீரேற்று நிலையத்திற்கு குழாய் மூலம் அக்குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது.
மேலும், அதனைத் தொடர்ந்து அங்கிருந்து நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப் படுகிறது. இந்நிலையில் திருப்புறம்மையம் மற்றும் இன்னம்பூர் இடையே ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது.
அது மட்டுமல்லாது. அக்குடிநீர் அப்பகுதியில் உள்ள அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள வயல்களுக்குள் சென்று நெல்பயிர்கள் நாசமாகி வருவதாகவும், இதனால் விவசாயிகள் நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் ஊராட்சித்தலைவர் மற்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் இந்த குடிநீர் குழாய் உடைப்பு தொடர்பான புகாரினை கும்பகோணம் மாநகராட்சி உயர் மட்ட அலுவலர்களிடம் பலமுறை எடுத்துக் கூறியும் எந்தவிதமான நடவடிக்கையும் இந்நாள்வரை எடுக்க படவில்லை எனவும் இன்னம்பூர் கிராமவாசிகள் மற்றும் ஊராட்சி தலைவர் தெரிவித்தனர்.
மேலும் அவ்வூர் மக்களும் ஊராட்சி மன்ற தலைவரும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருவதை தடுத்து நிறுத்திட உடனடியாக போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கையை கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம் எடுத்திட வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து இந்நிலை நீடித்து வந்தால் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மாநகராட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி:சுப்பிரமணியன்
ஊராட்சி மன்ற தலைவர் இன்னம்பூர்