காஞ்சிபுரம், ஆக. 15 –
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுபெற்று 76 ஆம் ஆண்டு துவங்கியுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் தேசிய கொடியேற்றி அரசு மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே ஏகனாபுரம் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
அங்கு நடைப்பெற்றக் கூட்டத்தில், காஞ்சிபுரம் அருகே பன்னாட்டு விமான நிலையம் அமையவுள்ளது. அதற்காக சுமார் 4000 ஏக்கர் நிலத்தை அரசு கையகபடுத்தவுள்ளது. மேலும், ஏகனாபுரம் கிராமத்தில் 2000 க்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் காஞ்சிபுரம் அருகே பன்னாட்டு விமான நிலையம் அமைய உள்ளதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் மேலும் அத்திட்டத்தை வரவேற்க்கின்றோம். ஆனால் குடியிருப்பு பகுதியை அகற்றாமலும், விவசாய நிலங்கள் பாதிக்காமல் விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அறிவிக்கும் அனைத்து உத்தரவுகளையும் நாங்கள் முறையாக கடைபிடிப்போம் என கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற 200 பேர் கையொப்பம் இட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிராம சபை கூட்டம் நிறைவுபெற்றதை தொடர்ந்து ஊராட்சியில் விமான நிலையம் தொடர்பாக மட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்ற கருத்துகளை பேச அனுமதி வழங்கவில்லை என குரல் எழுப்ப இரண்டு தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அருகில் இருந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.