காஞ்சிபுரம், ஆக. 13 –
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், கிளக்காடி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீகன்னியம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா நேற்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு கடந்த வாரம் அம்மனுக்கு காப்பு கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. விழா துவங்கிய நாள் முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டு அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து நேற்று மதியம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை முடிந்த பின் கோவில் வளாகத்தில் பெண்கள் ஊரணி பொங்கலிட்டும், வேப்பிலை ஆடை அணிந்தும், கோவிலை வலம் வந்து அம்மனை வழிபட்டனர். மாலை காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடலில் அலகு குத்திக்கொண்டு வாகனங்கள் இழுத்தும், அந்தரத்தில் தொங்கியபடியும், உடல் முழுவதும் பழங்கள் குத்திக் கொண்டு குளக்கரையிலிருந்து புறப்பட்டு அம்மனை இழுத்தவாறு வீதியுலா வந்தனர்.
மேலும், கோவிலருகே அமைக்கப்பட்டிருந்த தீக் குண்டத்தில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள். தொடர்ந்து அவர்களுக்கு காப்பு அவிழ்க்கப்பட்டது. இத்திருவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் தீபாராதனைக் காட்டி அம்மனை வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொது மக்கள் சிறப்பாக செய்திருந்தனர், விழாவிற்கு கிளக்காடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.