கும்பகோணம், ஆக. 08 –
கும்பகோணம் குடந்தை டெம்பிள் சிட்டி கூடை பந்தாட்ட கழகம் மற்றும் முன்னாள் திமுக மாமன்ற உறுப்பினர் கே.என் செல்வராஜ் நினைவாக மாநில அளவிலான மூன்று நாள் மின்னொளி கூடை பந்தாட்ட போட்டி நகர மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியை மாநகராட்சி துணை மேயர் சு.ப தமிழழகன் மண்டல தலைவர் ஆசைத்தம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்போட்டியில் சென்னை, பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சேலம், ஈரோடு, கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்திலிருந்து 26 அணியினர் கலந்து கொண்டனர்.
இப்போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்போட்டியில் முதல் பரிசு கோவை கூடை பந்தாட்ட அணி வீரர்கள் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையையும் துணை மேயர் சு.ப தமிழழகன் வழங்கினார்.
2 வது இடத்தைப்பிடித்த அறந்தாங்கி ஃபைட்டிங் ஸ்டார், அணியினருக்கு ரூ.8 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையை மண்டல தலைவர் ஆசைத்தம்பி வழங்கினார்.
3வது பரிசு மேட்டூர் ராயல்ஸ் அணியினருக்கு ரூ. 7 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. 4வது பரிசினை RMBC சென்னை அணியினருக்கு ரூ.6ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறந்த அணியினர் சிறந்த ஆட்டக்காரர் உள்ளிட்டவருக்கும் முதல் மூன்று இடங்களை பெற்ற அணியினருக்கும் கேடயம் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. மூன்று நாள் நடைபெற்ற போட்டியில் பல்வேறு பள்ளி கல்லூரியில் இருந்து மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.