கும்பகோணம், ஜூலை. 23 –
கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், என்பது, முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடுடாகும். இத்திருத்தலம் கட்டுமலை கோவிலாகும் இதில், 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக இருந்து இத்தலத்திற்கு வரும் முருக பக்தர்களுக்கு சேவை செய்வதாக ஐதீகம், மேலும் தந்தை சிவபெருமானுக்கே ஓம் எனும் பிரணவ மந்திரப்பொருளை குருவாக இருந்து உபதேசம் செய்து, சுவாமிக்கே நாதன் ஆனதால், இங்கே முருகப்பெருமான் சுவாமிநாத சுவாமி என போற்றப்படுகிறார்.
இத்தகைய சிறப்பு பெற்ற இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக நடைபெறுவது வழக்கம், இந்நிலையில் கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வாண்டு ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
மூலவர் சுவாமிநாத சுவாமி தங்ககவசம் அணிந்து வைரவேலுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சுவாமியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து இன்றிரவு திருக்கோயிலின் நேத்திர புஷ்கரணி என்ற திருக்குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.




















