கும்பகோணத்தில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியில் தீவிபத்து கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதியன்று ஏற்பட்டது. அவ்விபத்து ஏற்பட்டு 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் நினைவு தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள குழந்தைகள் நினைவு பூங்கா மற்றும் தீ விபத்து நடைபெற்ற பள்ளியில் அரசு தலைமை கொறடா நேரில் சென்று மலர்வளையம் வைத்து, அவ்விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கும்பகோணம், ஜூலை. 16 –

கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி காசிராமன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதில் 94 குழந்தைகள் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 18 குழந்தைகள் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை அப்போது ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் ஜூலை 16ஆம் தேதி துக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்நிகழ்வு நடந்து இன்றுடன் 18ம் ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதன் நினைவு தினத்தையொட்டி அவ்விபத்தில் குழந்தைகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் இறந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து , புத்தாடைகள் வைத்து கண்ணீரை காணிக்கையாக செலுத்தினர். அதனைத் தொடர்ந்து திமுக மாநகரம் சார்பில் அரசுதலைமை கொறடா கோவிசெழியன் பாலக்கரையிலிருந்து ஊர்வலமாக வந்து குழந்தைகள் நினைவு பூங்காவில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு விபத்து நடந்த பள்ளியில் வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

உடன் மாநகராட்சி மேயர் சரவணன் துணை மேயர் சு.ப தமிழழகன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இவ்விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் அரசு தலைமைகொறடா கோவி செழியனிடம் ஜூலை 16 குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்கள். அவர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு தலைமைகொறடா கோவிசெழியன் இது குறித்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று ஜூலை 16 ஆம் தேதியை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்கவும், உள்ளூர் விடுமுறை அளிக்கவும் வலியுறுத்துவேன் என்று தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here