கும்பகோணம், ஜூன். 23 –
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அருகே உள்ள மல்லபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ரமேஷ். இவர் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் இவ்வூராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவரது ஊராட்சியில் மல்லபுரம், கச்சுகட்டு, திருமலைராஜபுரம், கீழ திருமலைராஜபுரம், வில் வேலங்குடி ஆகிய கிராமங்களை உள்ளடக்கி 900 குடும்பங்கள் உள்ளன. இவரது மகள் ஷாலினி கைலாஷ் திருமண விழா வருகிற 24-ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற உள்ள நிலையில் 900 குடும்பத்தினருக்கும் வீடு வீடாக சென்று தனது மகளின் திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.
அவர் வழங்கிவுள்ள திருமண அழைப்பிதழில் 900 குடும்பத்தின் தலைவர் தலைவி பெயர்களை தங்கள் நல்வரவை விரும்பும் உறவினர்கள் என பெயர் அச்சடிக்கும் இடத்தில் அச்சடித்துள்ளார். ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் கொடுத்த பத்திரிக்கையை பார்த்த ஊர் மக்கள்,ஆச்சரியப் படுவதுடன் உறவினர்களே அழைப்பிதழ்களில் பெயர் போடுவதற்கு யோசிக்கும் இந்த காலகட்டத்தில் ஜாதி மதம் கட்சி என எவ்வித பாகுபாடின்றி ஊர் மக்கள் அனைவரின் பெயரையும் தனது குடும்ப திருமண அழைப்பிதழில் அச்சடித்து அனைவரும் ஒரே குடும்பம் என்ற மகிழ்ச்சியை தந்துள்ளார்.
இந்த திருமணம் எங்களுடைய வீட்டில் நடப்பது போல் எங்கள் பெயரையும் பத்திரிக்கையில் போட்டது தங்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக இவ்வூர் மக்கள் ஊராட்சி மன்ற தலைவரை பாராட்டி வருகிறனர்.






















