கும்பகோணம், மே. 03 –
தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலின் சித்திரை திருவிழா பெரியத்தேர் தேரோட்டம் நடைப்பெறவிருப்பதை முன்னிட்டு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அதன் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து, பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடன் தேரோடும் வீதிகளில் நேரில் பார்வையிட்டு இன்று ஆய்வு நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் உரிய பாதுகாப்புடன் சிறப்பாக தேரோட்டம் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது, இத்திருக்கோயிலின், சித்திரை பெரிய தேர் தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இத்தேரின் தேரோட்டம், வருகிற 14ம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக தேர் கட்டுமானப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இத்தேர் அலங்கரிக்கும் போது சுமார் 110 அடி உயரத்தில், 46 அடி அகலத்தில், 450 டன் எடை கொண்டதாக பிரமாண்டமாக இருக்கும்.
இந்நிலையில், சமீபத்தில் களிமேடு, அப்பர் தேர்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் சிக்கி 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகம் முழுவதும் தேரோட்ட நிகழ்வுகளில் எந்தவித பாதுகாப்பு குறைபாடுகளும் நேராத வண்ணம், மிகவும் கவனமாக முன்னச்சரிக்கை நடவடிக்கை தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சாரங்கபாணிசுவாமி கோயில் சித்திரை தேரினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன், அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, கோயில் செயல் அலுவலர் ஆசைதம்பி, மாநகராட்சி துணை மேயர் சு ப தமிழழகன், வணிகர் சங்க பேரமைப்பு தஞ்சை மாவட்ட செயலாளர் வி சத்தியநாராயணன், கோயில் பட்டாட்சார் சக்ரபாணி, கோயில் கொத்தனார் ரமேஷ் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து தேரோடும் வீதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர்,
வரும் 14ம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ள சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் சித்திரை பெரிய தேரின் தேரோட்டம் உரிய பாதுகாப்புடன் சிறப்பாக தேரோட்டம் நடைபெற, அனைத்து அரசு துறையினருடன் இணைந்து, சகலவிதமான முன்னேற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டுள்ளது என்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்