ராசிபுரம், ஏப். 09 –
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தேங்கல்பாளையம ஆணைபட்டியான் காலனியைச் சேர்ந்த டிரைவர் சண்முகம், 45. இவரது மனைவி விஜயா 40. இவர்களுக்கு விஷால், 14, விஸ்வா, 12, என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இளையவரான விஸ்வா, தேங்கல்பாளையம் காந்தி கல்வி நிலையத்தில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான்.
இதே பகுதியில் பெரியசாமி, வீரமணி ஆகியோருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இந்தக் கிணற்றின் அருகே உள்ள புளியமரம் பகுதியில் காலை, மதியம் வேளையில் சிறுவர்கள் விளையாடுவது வழக்கம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு வீட்டில் விளையாட போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார் விஷ்வா. வெகுநேரமாகியும் விஸ்வா வீட்டிற்கு வராததால், விஜயா மகனைத் தேடிக்கொண்டு புளியமரம் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கும் மகன் இல்லாத நிலையில், சுற்றிலும் தேடிப் பார்க்கும் போது கிணற்றின் மேல் பகுதியில் விஸ்வாவின் செருப்பு இருந்ததை பார்த்துள்ளார்.
கிணற்றிலிருந்து நீர் குமிழிகள் வரவே அதிர்ச்சியடைந்த விஜயா அருகில் உள்ளவர்களிடம் கதறியபடி கூறியுள்ளார். அவர்கள் வந்துப் பார்த்து ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சிறுவனை மீட்டனர்.
நீச்சல் தெரியாத சிறுவன் கிணறு அருகே சென்றது ஏன்? வீட்டிலிலும் எந்தப் பிரச்னையும் இல்லை என்கின்றனர்? என்னக் காரணம் என பெற்றோரிடம் ராசிபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.