பெரியபாளையம், ஏப். 08 –
திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 126.5கி.மீ தூரத்திற்கு 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகங்களை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க ஏற்கனவே சாலை அமைத்துள்ள நிலையில் இந்த துறைமுகங்களை ஆந்திர மாநிலத்துடன் இணைப்பதற்காக சுமார் 3200கோடி ரூபாய் மதிப்பீட்டில் தச்சூர் – சித்தூர் 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகளை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
விவசாய நிலங்களை கையகப்படுத்த ஏற்கனவே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெரியபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முப்போகம் விளைய கூடிய நஞ்சை நிலங்களை கையகப்படுத்த கூடாது எனவும், அரசு தங்களது நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர். 23ஆம் தேதி கோரிக்கை மாநாடு நடத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.