திருவேற்காடு, ஏப். 06 –
திருவேற்காட்டில் பாமக வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலை செய்துக்கொண்ட காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவரை அமலாக்கத்துறை சார்பாக விசாரணைக்கு அழைத்ததால் தற்கொலை செய்துக் கொண்டாரா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை. நடத்தி வருகின்றனர்.
சென்னை அடுத்த திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியை சேர்ந்த கோபிநாத் (31). இவர் பாமக திருவேற்காடு அமைப்பு செயலாளராகவும், பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு தூங்க செல்வதாக கூறி, வீட்டின் எதிரே உள்ள குடிசைக்கு சென்றார்.
சம்பவ நாளான இன்று காலை கோபிநாத்தின் தங்கை சென்று பார்த்த போது, மூங்கில் கட்டையில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்து திருவேற்காடு போலீசார், பிரேதத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில், கடந்த 2017ம் ஆண்டு, இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக, டிடிவி தினகரன் தரப்பு லஞ்சம் கொடுத்ததாக, டெல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதை அடிப்படையாக கொண்டு, அமலாக்கத்துறை வழக்கு பதிந்து சுகேஷ் சந்திராவிடம் விசாரணை நடத்தியது.
இந்த விவகாரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கறிஞர் கோபிநாத்தின் மூத்த வழக்கறிஞரான ராமாபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை அமலாக்கத்துறை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வழக்கறிஞர் மோகன்ராஜின் ஜூனியர் என்பதால் அமலாக்கத்துறை விசாரணைக்கு போன் மூலமாக அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் வழக்கறிஞர் கோபிநாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அனைவரிடத்திலும், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கோபிநாத் வீட்டிலும், அமலாக்கத்துறை சோதனை செய்துள்ளதாக தெரிகிறது.
அமலாக்கத்துறை விசாரணைக்கு பயந்து கோபிநாத் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் திருவேற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் எனத் தகவல் தெரிய வருகிறது.