கும்பகோணம், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
கும்பகோணம் அருகே உள்ள மிகவும் பிரசித்திப் பெற்ற திருநாகேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீஆதிதேவி மகா மாரியம்மன் ஆலயத்தின் 54 ஆம் ஆண்டு சித்திரை பெளர்ணமி திருவிழாவை முன்னிட்டு 2000க்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், காவடி, அலகு காவடி எடுத்து வந்தனர்.
திருநாகேஸ்வரம் மேல் வீதியில் உள்ள மிகவும் பிரசித்தி ஆதிதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை பெளர்ணமி திருவிழா நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு 54 ஆம் ஆண்டு சித்திரை பெளர்ணமி திருவிழாவை முன்னிட்டு 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், காவடி, பாலைக்கட்டி தொங்குதல், யானை கட்டி தொங்குதல், அலகு காவடி, கரும்புள்ளி, செம்புலி குத்துதல் உள்ளிட்டவைகளை எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினார்கள்.
இந்த பால்குட ஊர்வலம் மேலவீதியில், தொடங்கி வடக்கு வீதி, கச்சார் குளம், கடைவீதி, தெற்கு வீதி, எடத்தெரு வழியாக வந்து ஆலயம் வந்தடைந்தது. இதையடுத்து ஆதிதேவி மகாமாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் சேதுராமன், கலையரசு, சம்பந்தம், பாண்டியன் மற்றும் திருநாகேஸ்வரம், சீனிவாசநல்லூர் கிராமமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.























