ஆடுதுறை மதுர காளியம்மன் கோயில் 93 வது ஆண்டு திருநடனத்திருவிழா: திருநடனத்துடன் தெரு வீதியில் பவனி வந்த காளியம்மன்..
படையிலிட்டு தீபாராதனை காட்டி வழிப்பட்ட பக்தர்கள்..
கும்பகோணம், மார்ச். 30 –
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை மதுர காளியம்மன் கோயில், 93 ஆம் ஆண்டு திருநடனத்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று, வீதிகள் தோறும் திருநடனத்துடன் பவனி வந்த காளியம்மனுக்கு படையலிட்டு, தீபாராதனை செய்து வழிபட்டனர்.
கும்பகோணம் அருகாமையில் உள்ள ஆடுதுறை கஞ்சான் மேட்டுத்தெருவில் அமைந்துள்ள மதுர காளியம்மன் இப்பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக போற்றி வணங்கப்படுகிறது, இத்தலத்தில் 93வது ஆண்டு திருநடன திருவிழா கடந்த 21ம் தேதி திங்கட்கிழமை காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.
இவ் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, காளியம்மன் திருநடனம் நேற்று 29ம் தேதி செவ்வாய்கிழமை முதல் ஏப்ரல் 02ம் தேதி சனிக்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, மதுரகாளியம்மன் திருநடனத்துடன் பவனி வரும் வீதிகளில், ஒவ்வொரு குடும்பத்தினரும், மாவிளக்கு ஏற்றிவைத்து, தட்டில் பழங்கள், தேங்காய் மலர்சரங்கள், எலும்பிச்சம் பழம், மங்கல பொருட்களான வளையல் தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றுடன் மதுர காளியம்மனை தண்ணீர் நிரப்பிய சொம்பில் வேப்பிலை சொருகி வைத்து, அதன் பாதங்களை குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்வித்தும், தங்கள் வீடுகளுக்கு வரவேற்றனர்.
அப்போது பூசாரி தீபாராதனை செய்ய, மதுரகாளி தனது திருக்கரங்களால், பக்தர்களுக்கு திருநீற்று பிரசாதங்களை வழங்கியது. தொடர்ந்து வரும் ஏப்ரல் 08ம் தேதி வெள்ளிக்கிழமை அம்பாள் ஊஞ்சல் திருவிழாவும், அதனையடுத்து, 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வீரசோழ ஆற்றங்கரையில் 1008 பால்குட ஊர்வலம், அலகு காவடிகளுடன் வந்து, மதுரகாளியம்மனுக்கு மகா அபிஷேகமும் நடைபெற்ற பிறகு தயிர் பள்ளயம் இடப்பட்டு பக்தர்களுக்கு அன்னபிரசாதங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.






















