பூவிருந்தவல்லி, மார்ச். 25 –
சென்னை அடுத்துள்ள பூந்தமல்லி ஸ்ரீநகர் பகுதியில் மில்டன் ராஜதுரை அவரது மனைவி ஸ்ரீஜா இருவரும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொரனோ தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில் பூந்தமல்லி அமமுக நகர செயலாளர் ஜாகீர் அப்பாஸ் அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று சிக்கன் கறி விநியோகம் செய்து வந்துள்ளார். அப்போது ராஜதுரை வீட்டிற்குச் சென்று சிக்கன் விநியோகம் செய்து வந்த நிலையில் அவரது மனைவி ஸ்ரீஜா மற்றும் ஜாகீர் அப்பாஸ் ஆகியோருக்கு தொடர்பு ஏற்பட்டு செல்போன் வாயிலாக பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜதுரை மனைவியை கண்டித்து அவரது செல்போன் நம்பரை மாற்றியுள்ளார்.
இவ் விவகாரத்தால் அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் ராஜதுரை அவரது மனைவியுடன் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த ஜாகீர் அப்பாஸ் ராஜதுரை மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தன்னிடம் இருப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார் .இதனால் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அமமுக நகர செயலாளர் ஜாகீர் அப்பாஸ் ராஜதுரையின் தலையில் கல்லால் பலமாக தாக்கி உள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த ராஜதுரை பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பூந்தமல்லி காவல் துறையினர் அமமுக நகர செயலாளர் ஜாகீர் அப்பாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.