செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
ஆசிரியர் தினத்தையொட்டி நடைப்பெற்ற விழாவில் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப் பட்ட 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பயின்ற திருத்தணி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நல்லாசிரியர் விருதை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் வழங்கினார்.
திருத்தணி, செப். 5 –
ஆண்டுதோறும் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினமான செப் 5ஆம் தேதி சிறப்பாக பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நல்லாசிரியர் விருதும், வெள்ளி நினைவுப் பதக்கம், ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை, மற்றும் சான்றிதழ்கள் அரசால் வழங்கப் படும்.
அதைப்போன்று இந்த ஆண்டும் கல்வி ஆண்டு 2020-21 ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்விப் பயின்ற திருத்தணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைப் பெற்றது.
இவ்விழா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கிஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறும் போது இந்தியாவின் முதல் குடிமகன் ஜனாதிபதி முதல் கடை நிலை ஊழியர் வரை அனைவருக்கும் கல்வி கற்றுக் கொடுக்கும் பணி ஆசிரியர் பணி உலகத்தின் மிகச் சிறந்த பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் திருத்தணி எம்எல்ஏ சந்திரன் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பூபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.