ராசிபுரம், மார்ச். 21 –
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியம் அத்திப்பழகானூர் அருந்ததியர் தெருவைச் சேர்ந்த மோகன் மகன் சூர்யா, 21. இதே பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருபவர் ஜெகநாதன் என்ற 55. வயதுடையவர். இவருக்கு சொந்தாமன இந்தக் கோழிப் பண்ணையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சூர்யா வேலை செய்து வருகிறார்.
கோழிப்பண்ணையில் கோழிக் கூண்டுகளுக்கடியில் சேரும் கழிவுகள் உள்ள பகுதிகளில் எலித்தொல்லை இருந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் மின்கம்பி கொண்டு மின்சாரம் பாய்ச்சப்படுவது வழக்கமாக செய்து வந்துள்ளனர். பின்பு விடிந்ததும் மின் துண்டிப்பு செய்து விடுவதுமாக பழக்கப்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவ நாளான இன்று காலை 7 மணிக்கு கோழிப்பண்ணையில் கோழி கழிவுகளை அகற்ற சூர்யா சென்றுள்ளார். அப்போது, கோழி கழிவுகளை அகற்றும் போது மின்சாரம் தாக்கி சூர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் தற்போது, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம், குறித்து தகவலறிந்து கோழிப்பண்ணை உரிமையாளர் ஜெகநாதனிடம் ராசிபுரம் போலீசார் நடத்திய விசாரணை மேற்கொண்டனர், அவரிடம் நடத்திய விசாரணையில் காலையில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படாமல் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் இவ்வழக்குக் குறித்து தொடர்ந்து, ஜெகநாதன் மற்றும் சூர்யாவுடன் வேலை செய்த இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.























