ராசிபுரம், மார்ச். 21 –
ராசிபுரம் அடுத்துள்ள குருசாமிபாளையத்தில் 118வது ஆண்டாக தொடரும் ஹிந்து, முஸ்லிம் சமுதாய மக்கள் சேர்ந்து கொண்டாடிய சமூக நல்லிணக்க ஊர் திருவிழா நடைப்பெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் சிவசுப்ரமணியர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 9ம் தேதி துவங்கி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று (21ம் தேதி) மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது.
இந்நிலையில், 118வது ஆண்டாக பாரம்பரிய ஹிந்து, முஸ்லிம் சமுதாய பெரியவர்கள் சந்தனம் பூசிக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. ராசிபுரம் கிழக்கு தெரு பள்ளி வாசலைச் சேர்ந்த DK.உஷேன் தலைமையில் இஸ்லாமியர்கள் குருசாமிபாளையம் வந்தனர்.
அங்குள்ள சிவசுப்ரமணியர் கோவிலில் இருந்து வெள்ளை கொடி ஏந்தி, மேளம் வாத்தியம் முழங்க வீடு மற்றும் கடைகளின் சுவர்களில் சந்தனத்தை பூசினர். பின்னர், செங்குந்தர் பாவடி மைதானத்தில் உள்ள சென்டா மரத்தில் (புளிய மரம்) வெள்ளைக் கொடியை ஏற்றினர். அப்போது, ஊர் பெரியதனக்காரர் ராஜேந்திரன் கைகளில் DK.உஷேன் சந்தனம் பூசினார்.
பின்னர் அவருக்கு ராஜேந்திரன் சந்தனம் பூசினார். இருவரும் ஒருவருக்கொருவர் பூ மாலையை மாற்றிக் கொண்டனர். பாத்தியா ஓதி முஸ்லிம்கள் அங்கிருந்த மக்களுக்கு நாட்டுச் சர்க்கரை மற்றும் பொட்டுக் கடலை வழங்கினர். ஹிந்துக்கள், முஸ்லிம் மக்களுக்கு விருந்து கொடுத்தனர். இது கடந்த, 118 ஆண்டாக நடக்கும் சமூக நல்லிணக்க நிகழ்ச்சியாகும். இந் நிகழ்ச்சி அப்பகுதி அனைத்து தரப்பட்ட சமூக மக்களிடையே நல்லிணக்க ஒற்றுமை வலுப்படுத்தும் செயலை ஏற்படுத்தி வருகிறது. என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, விழாக்குழுவினர் கூறுகையில்,
குருசாமிபாளையம் பகுதியில், கைத்தறி நெசவு தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த தொழிலுக்கு, அச்சு கட்டி கொடுக்கும் தொழிலை முஸ்லிம்கள் செய்து வந்தனர்.
கடந்த, 100 ஆண்டுகளுக்கு முன் ஃபிளேக் நோயால் ஊர் மக்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது, முஸ்லிம் பெரியவர்கள், சென்டா மரம் எனக் கூறப்படும், புளிய மரத்தின் கீழ், நோயால் பாதிக்கப்பட்டவருக்கு பாத்தியா ஓதி பொட்டுக் கடலை மற்றும் நாட்டு சர்க்கரை கொடுத்தனர். அதனால் நோய் குணமானதாக, பெரியவர்கள் கூறிவருகின்றனர்.
ஒவ்வொரு பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு ஒரு வாரம் முன்பு, குருசாமிபாளையம் ஊர் பெரியவர்கள், ராசிபுரம் அச்சு கட்டித்தெரு கிழக்கு பள்ளிவாசலுக்கு, தேங்காய் பழம் தட்டுடன் வந்து, திருவிழாவுக்கு அழைப்பு விடுப்பர். அதன் பேரில், இரு சமுதாய மக்களிடையே, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்றனர். மேலும் கொரோனா காரணமாக கடந்த 2020ல் இவ்விழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.























