சித்தலப்பாக்கம், மார்ச்.10 –

சென்னை அருகே நாய் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி காவல் நிலையத்தில் நாயின் உரிமையாளர் புகார்  அளித்துள்ளார்.

சென்னையை அடுத்த சித்தலப்பாக்கம் சங்கராபுரம் 1வது குறுக்கு தெருவில் வசிப்பவர் ஸ்ரீதர் (37) இவர்  தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவரது வீட்டில் சிக் குக் என்ற பெயரில் நாட்டு நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்துள்ளார். இந் நிலையில் கடந்த 7ம் தேதி காலை ஶ்ரீதர் வேலைக்கு செல்லும் போது சிக் குக் உடலில் ரத்த காயங்களுடன் வீட்டுக்கு வந்துள்ளது.

கம்பியில் கிழித்துக் கொண்டிருக்கும் என்று நினைத்த ஶ்ரீதர் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்து மாலை வீட்டிற்கு வந்த போதும் நாயின் உடலில் ரத்தம் நிற்காமல் வந்த வண்ணம் உள்ளதை பார்த்த ஸ்ரீதர் உடனடியாக அந்த நாயை மீட்டு அருகில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு நாயை பரிசோதித்த மருத்துவர் உள்ளே காயம் ஏதேனும் உள்ளதா என்பதை பரிசோதிக்க ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனையில் நாய்க்கு காயம் பட்டுள்ள இடத்தை ஸ்கேன் எடுத்துள்ளனர். ஸ்கேன் ரிப்போர்ட்டில் நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தும் சிரிய ரக தோட்டா (துப்பாக்கி குண்டு) நாயின் உடலில் இருந்ததை கண்டு மருத்துவர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதை அடுத்து வேளச்சேரியில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை நாய்க்கு அறுவை சிகிச்சை செய்து உடலில் இருந்த தோட்டாவை வெளியே எடுத்து தையல் போட்டுள்ளனர். மேலும் நாய்க்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுக் குறித்து ஸ்ரீதர் இன்று பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் நாய் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்துள்ளார். அதனுடன் நாயின் உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டவையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

பெரும்பாக்கம் போலீசார் இதுவரை வழக்குப்பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டி வருவதாக நாயின் உரிமையாளர் உட்பட அப்பகுதி குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வீட்டின் மாடியிலிருந்து நாய் ஒன்றை தூக்கி வீசிப்பட்டவரை சிறையில் அடைத்த நிலையில் நாய் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக புகார் அளித்தும் பெரும்பாக்கம் போலீசார் மெத்தனமாக செயல்பட்டு அலட்சியம் காட்டி வருவதாக ஸ்ரீதர் உட்பட அப்பகுதி குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். நாய் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாயின் மீது துப்பக்கியால் சுட்ட மர்மநபரை பிடித்து தண்டணை அளிக்கப் படவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here