திருவண்ணாமலை மார்.6-
விதிகளுக்கு மாறாக ஊராட்சி செயலாளர்களை பணிமாற்றம் செய்யும் அதிகாரிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்வது என திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் எதிரே வேங்கிக்காலில் ஒரு தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு ஊராட்சிகள் செயலாளர் சங்க மாவட்டம் மையம் சார்பில் மாநில கட்டிடம் நிதி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட தலைவர் எம்.சுகுமார் தலைமை தாங்கினார். தலைமைநிலைய செயலாளர் வி.சுரேஷ் மாவட்ட செயலாளர் ஆர்.சீத்தாராமன் ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட பொருளாளர் எம்.ஏழுமலை அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோவிடம் மாவட்ட தலைவர் எம்.சுகுமார் தலைமையில் சங்க நிர்வாகிகள் சங்க மாநில கட்டிடம் கட்டுவதற்காக முதற்கட்டமாக ரூ10லட்சம் கட்டிட நிதி வழங்கினர்.
நிதியினை பெற்றுக்கொண்ட மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில மைய புதிய கட்டிடம் ரூ.10கோடியில திருச்சியில் விரைவில் கட்டப்படவுள்ளது இதற்கான நிதி திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.1கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முதற்கட்டமாக ரூ.10லட்சம் சங்க நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். மீதமுள்ள கட்டிட நிதி தொகை வரும் 15ந் தேதிக்குள் வழங்க உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் என்றார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட மையம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களில் அரசு விதிகளை மீறி ஊராட்சி செயலாளர்கள் பணிமாறுதல் அளித்த அதிகாரிகள் மீது விரைவில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்வதென்றும் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் விரோத போக்கை கண்டித்து மாவட்ட அளவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் எம்.கே.பச்சையப்பன், துணை செயலாளர் அண்ணாச்சி மற்றும் சங்க நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.நாராயணன் நன்றி கூறினார்.