ஊத்துக்கோட்டை, பிப். 28 –
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை காவல் நிலையச் சரகத்திற்குட்பட்ட இருதரப்பினருக்கிடையே தகராறு காரணமாக இரு தரப்பைச் சார்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் இருதரப்பைச் சேர்ந்த 9 பேர் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட அப்துல்காதர் என்பவரின் மகன் முகமது சித்திக் வயது 44 காவல்நிலையத்தில் கொடுத்த புகாரில் தானும் தன் தம்பியும் தங்கள் வீட்டின் முன்பு நின்று பேசிக்கொண்டு இருந்த போது, அதை ஊரைச்சேர்ந்த இராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் ஞானசேகர் வயது 39, மாரிமுத்து என்பவரின் மகன் சதீஷ், வசந்தா, நிர்மலா மேலும் சிலர் தங்கள் இருவரையும் கீழே தள்ளிவிட்டு தகாத வார்த்தைகளால் திட்டியும் எங்களுக்கு எதிராக செயல்படும் உங்கள் இருவரையும் கொன்று விடுவோம் என்று மிரட்டி தனது தலையில் கட்டையால் தாக்கிவிட்டு, தங்கள் வீட்டு பெண்களைப் பார்த்து கொலை மிரட்டல் விட்டதாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஊத்துக்கோட்டை சாவடிதெருவைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் ஞானசேகரன் வயது 39 என்பவர் காவல் நிலையத்தில் அவர் எதிர் தரப்பினர் மீது கொடுத்துள்ள புகாரில் எனது அக்கா மகன் அப்பகுதியில் உள்ள பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த அப்துல்காதர் மகன் முகமது ஜமால், ஷேக்தாவூத் என்பவரின் மகன் அசார், அப்துல் காதர் மகன் முகமது சித்திக் மற்றும் அவரது மனைவி மேலும் ஜமாலின் மனைவி ஆகியோர் முன் விரோதம் காரணமாக அக்கா மகனை அடித்து துன்புறுத்தியதாகவும், அதனை தடுத்த தன்னை அடித்து கொலை மிரட்டல் விட்டதாகவும் அவர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஊத்துக்கோட்டை காவல்நிலைய போலீசார் இருவர் தரப்பு புகாரின் அடிப்படையில் இருதரப்பைச் சேர்ந்த 9 பேர்களிடம் முதல்கட்ட விசாரணை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.