கும்பகோணம், பிப். 10 –
கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று முன்னாள் எம்எல்ஏவும், மாநகர செயலாளருமான இராம இராமநாதன் தலைமையில் கும்பகோணத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான ஆர் வைத்திலிங்கம் கலந்து கொண்டு எப்படி வாக்கு சேகரிக்க வேண்டும் என்பது குறித்து வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தினார். அப்போது வேட்பாளர்கள் ஒவ்வொரு வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்க, அதிக கால அவகாசம் உள்ளது, எனவே அதனை பயன்படுத்திக் கொண்டு வேட்பாளர் தனது கணவன் அல்லது மனைவியுடன் குடும்பமாக சென்று ஒவ்வொரு குடும்பம் குடும்பமாக நேரில் சந்தித்து பேசி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றும், அம்மா ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு நிறுத்தி வைத்து விட்டதையும், எடப்பாடி அரசு, பொங்கல் பரிசாக, ரூபாய் 2,500 வழங்கியதை திமுக அரசு வழங்காமல் வஞ்சித்ததுடன், வழங்கிய பொங்கல் பரிசு பொருட்களும் உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு தரம் அற்று இருந்ததையும், நீட் தேர்வு அதிமுகவிற்கு ஏற்புடையதல்ல, ஆனால் இந்த நீட் தேர்விற்கான மசோதாவை கொண்டு வந்ததே காங்கிரஸ் ஆட்சி காலத்தில், கூட்டணி அரசில், திமுகவை சேர்ந்த காந்தி செல்வன் தான் என்பதனையும் வாக்காளர்களுக்கு நினைவு படுத்தி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றும் பேசினார்.
கும்பகோணம் முதல் மேயர் என்ற பெருமையை அதிமுக பெற வேண்டும், கும்பகோணம் மாநகராட்சி வெற்றியை கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கரங்களில் ஒப்படைக்க அனைவரும் சூளுரை ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தார் இக்கூட்டத்தில், முன்னாள் மயிலாடுதுறை எம்.பி பாரதி மோகன், முன்னாள் நகர கழக செயலாளர்கள் பி எஸ் சேகர், ராஜேந்திரன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர் கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 48 வட்டங்களில் 47 வட்டங்களில் அதிமுக போட்டியிடுகிறது, 13வது வட்டம் கூட்டணி கட்சியான தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டு அதன் வேட்பாளராக ஜெய்ஹிந்த் மோகன் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடதக்கது
கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த, கழக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர் வைத்திலிங்கம், தமிழகத்தில், கடந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சிய காலத்தில், 11 அரசு மருத்துக்கல்லூரிகள் கொண்டு வந்ததும், மருத்துவக்கல்லூரியில் சேர அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அத்துடன் அவர்களது மருத்துவக்கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசே ஏற்கும் என்பது உட்பட அதிக சாதனைகள் புரிந்துள்ளதால் தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகியவற்றில் 70 சதவீத இடங்களில் அதிமுகவே கைப்பற்றி வெற்றி பெறும் என்றும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுவது குறித்தும் இதே நிலை இனி வரும் காலங்களில் தொடருமா என்ற கேள்விக்கு, அரசியலில், நிரந்தர நண்பனும், இல்லை பகைவரும் இல்லை, அந்த சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்




















