கும்பகோணம், பிப். 10 –
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கும்பகோணம் மாநகராட்சிக்கு நடைப்பெறும் தேர்தலில் 48 வார்டுகளில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
அப்போது அவர் பேசுகையில், ஆட்சி அமைத்த 8 மாதத்தில் 9 கோடி கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட்டுள்ளோம், அதனால் தான் 3வது அலையை அபாயமின்றி கடந்திருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும். ஒமைக்ரானை எளிதாக வென்றிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம், ஸ்டாலின் ஆட்சி தான். ஒவ்வொரு அமைச்சரும், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் களத்தில் இறங்கி வேலை பார்த்ததால் தான், அது சாத்தியமானது.
அதுமட்டுமின்றி தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை கிட்டத்தட்ட 50 சதவீதத்தை நிறைவேற்றியிருக்கிறோம். அந்த உரிமையில் தான் மக்களிடம் சென்று உதயசூரியனுக்கும், திமுகவிற்கும் வாக்கு கேட்டுக் கொண்டிருக்கிறேன். மகளிருக்கு இலவச பஸ் பயணம் தருவாக கூறினார், செய்தாரா இல்லையா? கொரோனா நிவாரணத் தொகை 4 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினார், அதையும் 2 தவணையாக கொடுத்துவிட்டோம். ஆவின் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பதாக கூறினார், செய்தார். பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பதாக கூறி, முதற்கட்டமாக செய்து முடித்தார். இப்படி சொல்லியதை எல்லாம் செய்திருக்கிறோம். இப்படிப்பட்ட நல்லாட்சிக்கு மக்களிடத்தில் நல்ல பெயர் உள்ளது. இந்தியா முழுவதும் திரும்பிப் பார்க்கும் நல்லாட்சி நடக்கிறது, மேலும், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி உள்ளவரை எந்த கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாக கூறிய அவர், அதிமுக மற்றும் பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக திமுக விளங்குகிறது என குறிப்பிட்டார். தொடர்ந்து திருபுவனம் திருவிடைமருதூர் பகுதிகளில் பேரூராட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.




















