சென்னை, அக். 7 –
சார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் நேற்று காலை சென்னை வந்த சக்திகுமார் கிருஷ்ணசாமி என்ற பயணி தனது உடலில் 675 கிராம் தங்க கட்டிப் பொட்டலங்களை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார். அவரை சோதனை செய்த சுங்கத்துறை புலனாய்வு பிரிவினர் அதனைக் கண்டுப் பிடித்து அவரிடமிருந்து சுங்க சட்டத்தின் கீழ் தங்கக்கட்டிப் பொட்டலங்களை பறிமுதல் செய்து மேற் கொண்டு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் உள்ள வெளிநாட்டு தபால் அலுவலகத்தில் டில்லியைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு 7 பார்சல்களை முன்பதிவு செய்திருந்தார். சந்தேகத்தின் பேரில் அவற்றை சுங்க அதிகாரிகள் சோதனை செய்ததில், அவற்றில் 2 பார்சல்களில் ஓனாபில் – 2 குளோனாசெபம் என்ற போதை மாத்திரைகள் 2,800 இருந்துள்ளன. மேலும் 3 பார்சல்களில் டயஸெபம் என்ற 4,500 போதை மாத்திரைகளும், மீதமுள்ள 2 பார்சல்களில் டிரமடால் என்ற போதை மாத்திரைகள் 2,800 ம் இருந்துள்ளன. இவையனைத்தும் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட பொருட்களாகும். மொத்தம் 7 பார்சல்களில் இருந்து 10,100 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்து தொடர்பாக மேலும் தொடர் விசாரணை மேற் கொண்டு வருவதாக அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.