திருவண்ணாமலை, செப்.10-
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 12ந் தேதி கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் 973 இடங்களில் நடக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் வரும் 12ந் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தி அதிகபட்சம் 25லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நடந்தது.
அதில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசாமி, கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், மாவட்ட வன அலுவலர் அருண்லால் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆட்சியர் பா.முருகேஷ் கூறுகையில்
கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள தற்போது நமக்கு கிடைத்திருக்கிற ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும்தான். பொதுமக்களிடம் தடுப்பூசி குறித்து ஏற்கனவே இருந்த தயக்கம் தற்போது குறைந்திருக்கிறது. ஆர்வத்தோடு தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருகின்றனர். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் 100சதவிதம் தடுப்பூசி செலுத்துவதற்கான தீவிரமான பணியில் அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஈடுபடவேண்டும். தமிழக அரசின் உத்தரவின்படி வருகிற 12ந் தேதி மாவட்டம் முழுவதும் 973 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதிவாய்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட 19லட்சத்து 62 ஆயிரத்து 896 நபர்கள் உள்ளனர். அதில் தற்போது வரை 8 லட்சத்து 39 ஆயிரத்து 766 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 1 லட்சத்து 45 ஆயிரத்து 257 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே வரும் 12ந் தேதி நடைபெறும் மெகா சிறப்பு முகாம்களின் மூலம் 1 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் முழுமையாக வெற்றியடைய அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.