திருவண்ணாமலை, செப்.10-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசாமியை வாணியந்தாங்கல் கிராம அனைத்து கோவில் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் சீ.எல்லப்பன் தலைமையில் ஊர்பொதுமக்கள் மனு அளித்தனர்.
அந்த மனுவில் திருவண்ணாமலை வட்டம் நொச்சிமலை ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமமான வாணியந்தாங்கல் கிராமத்தில் கடந்த ஆண்டு சி.செல்வவிநாயகர் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் 25 செண்ட் இடத்தினை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோபி ஏழுமலை தனது மகன் சந்துரு பெயரில் பட்டா மாற்றம் செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
இதனையறிந்த கிராம பொதுமக்கள் நிலத்தினை மீட்கக்கோரியும் ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டு கோவில் நிலத்தினை முறைப்படி அரசின் உதவியுடன் மீட்டெடுத்தனர்.
இது போன்ற சம்பவங்கள் நடந்திடாமல் இருக்க கிராமத்தில் அமைந்துள்ள கோவில்களை பாதுகாத்து திருப்பணிகள் மேற்கொள்ளவும் அதனைத் தொடர்ந்து பராமரிக்க கிராம பொதுமக்களின் ஒருமித்த கருத்தோடு வாணியந்தாங்கல் கிராம அனைத்து கோவில் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டு அரசின் சட்ட திட்டங்களுக்குட்பட்டு முறையாக சார்பதிவாளர் அலவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில் ரூபாய் பலகோடி மதிப்புள்ள சொத்தினை மீட்டெடுக்க அறக்கட்டளை சார்ந்த நபர்கள் மீதும் அதற்கு உறுதுணையாக இருந்த பொதுமக்கள் மீதும் தொடர்ந்து அச்சுறுத்தும் வண்ணம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோபி (எ) ஏழுமலை மற்றும் 6 நபர்கள் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடமும் கீழ்பென்னாத்தூர் காவல்நிலையத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கிராம பொதுமக்களுக்கு எதிராக செயல்படும் 6 பேர் கோவிலில் பழைய பூட்டை அகற்றிவிட்டு புதிய பூட்டு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து 13 ஆண்டுகாலமாக அமாவாசை இரவு அம்மன் ஊஞ்சல் சேவை நல்லமுறையில் நடந்து வருவது வழக்கம். இந்த விழாவில் சுற்றுப்புறம் மட்டுமின்றி பல்வேறு கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வந்தனர். கடந்த 6 ந் தேதி அன்று அமாவாசை பூஜை நடைபெறக்கூடாது என்று பூட்டு போட்டு இருந்ததால் பகதர்கள் ஏமாற்றமடைந்து மனம் கலங்கி வருத்தத்துடன் திருப்பி சென்றனர்.
இருதரப்பிற்கும் பிரச்சனை ஏற்பட்டு விசாரணை நிலுவையிலுள்ள நிலையில் கோவிலுக்கு பூட்டு போட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஸ்ரீமகாகாளியம்மன கோவில் மற்றும் ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலில் தொடர்ந்து வழிபாடு நடத்திட வழிவகை செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசாமி, திருவண்ணாமலை கோட்டாட்சியர் வீ.வெற்றிவேலுக்கு மனுவினை பரிந்துரை செய்து வழிபாட்டு பிரச்சனை கருத்தில் கொண்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.