கேளம்பாக்கம்: செல்போன் கடையில், கத்திமுனையில் செல்போன்கள், பணம் கொள்ளை – 4 பேர் கைது ! கஞ்சா புகைப்பதற்கும், பெண்களோடு உல்லாசமாக இருப்பதற்கும், கொள்ளையடித்ததாக போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் மங்கள் என்ற பெயரில் செல்போன் கடை ஒன்றை போல்ராம் என்பவர் நடத்தி வருகிறார். அக்கடையில் சம்பவத்தன்று வாடிக்கையாளர்கள் போல் வந்த 4 பேர் கத்தி முனையில் செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், இன்று அவர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளை அடித்த தற்கான காரணத்தை போலீசாரிடம் வாக்கு மூலமாக கூறினர். பெண்களுடன் உல்லாசமாக இருக்கவும், கஞ்சா புகைக்கவும் இக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்..
செய்தி சேகரிப்பு இ.சி.ஆர். ப.வினோத் கண்ணன்
சென்னை, ஆக. 19 –
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே உள்ள மங்கள் எனும் செல்போன் கடையில் கடந்த ஆக 8ம் தேதி இரவு சுமார் 8:30 மணியளவில் நான்கு பேர் குண்ட கும்பல் நுழைந்து செல்போன் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் போல் நாடகமாடினர்.
அப்போது, கடை உரிமையாளர் போல்ராம் மற்றும் இரண்டு ஊழியர்கள் என மூன்று பேர் கடையில் இருந்துள்ளனர். கடைக்குள் நுழைந்த நான்கு பேரும் கேட்கும் செல்போன்களை எடுத்து எடுத்து காண்பித்துள்ளனர்.
சுமார் 10 நிமிடங்களக வாடிக்கையாளர்கள் போல் நடத்த அந்த நான்கு பேரும் கடைக்குள் வேறு யாரும் வராத நிலையில் திடீரென அவர்கள் பேக்கில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்ட துவங்கியுள்ளனர்.
பின்னர் கடை உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரையும் ஒரு ஓரமாக நிற்க வைத்துவிட்டு விலை உயர்ந்த 18 செல்போன்களையும், கல்லாபெட்டியில் இருந்த ரூபாய் 56,000 பணம் ஆகியவற்றை கத்தி முனையில் கொள்ளையடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்பி சென்ற பின் உடனடியாக வேறு யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் இருக்க கடை ஊழியர் ஒருவரின் செல்போனை கீழே போட்டு உடைத்துள்ளனர்.
கடையில் புகுந்து நான்குபேரும் வாடிக்கையாளர்கள் போல் நடித்து கத்தி முனையில் செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்ற அனைத்தும் கடையில் பாதுகாப்பிற்காக பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
குற்றவாளிகள் கத்தி முனையில் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சியுடன் அருகில் உள்ள கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் மணிமாறனிடம் கடை உரிமையார் போல்ராம் புகார் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார் கடையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் கைரேகை உள்ளிட்ட தடையங்களை சேகரித்தனர்.
மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராஜா, நெடுமாறன், தனசேகர், செந்தில், காவலர்கள் புருசோத், சுரேஷ், முரளி, தமிழரசன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து, கொள்ளையடிக்க வந்தவர்கள் கொண்டு வந்த வாகனங்களின் பதிவு எண்ணை கொண்டும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை கொண்டும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந் நிலையில் நேற்று கோவளம் சந்திப்பில் கிழக்கு கடற்கரை சாலையில் கேளம்பாக்கம் ஆய்வாளர் மணிமாறன் உள்ளிட்ட போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியாக இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை சந்தேகத்திற்கிடமாக மடக்கி விசாரித்ததில் முன்னுக்கு பின் முரனாக பேசியதாலும், அதில் ஒருவர் குடும்பி போட்டுள்ளதாலும் போலீசாரின் சந்தேகம் வலுத்தது.
பின்னர் அவர்கள் நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த ரஞ்ஜித்(25), ஜெயக்குமார்(எ)சூர்யா(24), கஜா(எ)ஜெகதீஸ்(22), விக்கி(எ)வினேஷ்(24) என்பதும் இவர்கள் நான்கு பேரும் கடந்த 8ம் தேதி இரவு மங்கள் செல்போன் கடையில் கத்தி முனையில் செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டனர்.
மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜெயபிரகாஷ், (எ) சூர்யா, கஜா (எ) ஜெகதீஸ், கல்லூரி பட்டபடிப்பு படித்துள்ளதும், விக்கி (எ) விக்னேஷ் டிப்ளோமா படித்துள்ளதாகவும், ரஞ்ஜித் மற்றும் ஜெயபிரகாஷ் (எ) சூர்யா மீது பொன்னேரி காவல் நிலையத்தில் இரண்டு கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும். கொலை வழக்கில் ஒரு வருடமாக சிறையில் இருந்து கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் வெளியே வந்ததும் தெரியவந்தது.
இதே போல் கஜா (எ) ஜெகதீஸ் மற்றும் விக்கி (எ) விக்னேஷ் இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு, கத்தி முனையில் வழிபறி, கொள்ளை சம்பவம், பைக் திருட்டு போன்ற குற்ற வழக்குககள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
பின்னர் அவர்களிடமிருந்து செல்போன் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 18 செல்போன்கள், ஒரு கத்தி, 5 இருசக்கர வாகனங்கள், ரூபாய் 4000 ஆகியவற்றை தனிப்படைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
செல்போன் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட ரூபாய் 56,000 வைத்து கஞ்சா வாங்கி புகைத்தும், பெண்களுடன் உல்லாசமாக இருந்தும் பணத்தை செலவழித்துள்ளனர்.
பெண்களுடன் தனிமையில் உல்லாசமாக இருப்பதற்காகவும், கஞ்சா புகைப்பதற்காகவும்தான் தொடர்ந்து இது போன்ற குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் கேளம்பாக்கம் மற்றும் திருவள்ளூர் முத்தியால்பேட்டை காவல் நிலையக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்ட இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
காவல் நிலையம் மிக அருகில் உள்ள இந்த கடையில் மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த நேரத்தில் கத்தி முனையில் நடைப் பெற்ற இந்த துணிகர செயலில் ஈடுபட்டவர்களை கேளம்பாக்கம் போலீசார் கைது செய்து கொள்ளைப் போன பொருட்களை முழுவதுமாக பறிமுதல் செய்ததற்கு வியாபரிகள் மற்றும் பொதுமக்கள் போலீசார்க்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.