சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் சமூக சீர்திருத்த துறை ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் மகளிர் குழந்தைகள் திருநங்கையர் மூத்த குடிமக்களின் பாது காப்பு உரிமை மற்றும் நலனை உறுதி செய்திட வேண்டுமென அக்கூட்டத்தில் முதல்வர் வழியுறுத்தினார்.
சென்னை, ஜூலை 28-
இக்கூட்டத்தில் மகளிர் குழந்தைகள் மூன்றாம் பாலினர் மூத்த குடி மக்களின் பாதுகாப்பு உரிமை மற்றும் நலனை உறுதி செய்திடும் வகையில் பெண் கல்வி, மற்றும் சமூகச் சீர்திருத்தங்களுக்காக செயல்படுத்தப் படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளில் குறிப்பாக திருமண நிதியுதவி திட்டங்களில் தகுதி வாய்ந்த பயனாளிகள் யாரும் விடுபடாமல் உரியக் காலத்தில் பயன்களை வழங்க வேண்டும். மேலும் குழந்தை திருமணம், பெண் சிசுக்கொலை போன்ற சமூக அவலங்களைக் களைய உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இதுக் குறித்த விவரங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்றும் அதற்கான சட்டங்களை கடுமையாக நடை முறைப்படுத்த வேண்டும். குழந்தைகள் திருமணம் அதிகமாக நடைப்பெறும் விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தரும்புரி, மற்றும் தேனி மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்திட வேண்டும்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் சத்துணவு திட்டம் மூலம் வழங்கப் படும் உணவு உலர் உணவு பொருட்கள் சத்து மாவு முட்டைகள் ஆகியவற்றை சுத்தமாகவும் உயர் தரமானதாகவும் வழங்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையில் இந்திய அளவில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டாலும் ஊட்டச்சத்துப் பற்றாக் குறையினால் வரும் உயரக்குறைவு, மிகுந்த மெலிவுத்தன்மை, இரத்தசோகை ஆகிய குறைபாடுகள் அதிகம் காணப்படும் மாவட்டங்களை கண்டறிந்து சிறப்புக் கவனம் செலுத்தி தமிழகத்தினை ஊட்டச்சத்து குறைபாடில்லா மாநிலமாக உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து மேற் கொள்ள வேண்டும். மேலும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளையும் கண்டறிந்து பராமரிப்பு இல்லங்கள் மூலம் சிறப்பான கல்வி அளிக்கவும் கேட்டுக் கொண்டார்.
கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாக தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளை கண்டறிந்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வைப்புத் தொகைத் திட்டத்தினல் பயன் பெற உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். திருநங்கையர் கல்வியறிவு பெற்று சுயமாக இயங்கவும் பாதுகாப்புடன் வாழவும் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் திருநங்கையர் நலவாரியத்தின் மூலம் மேற்கொண்டு அவர்களுக்கு சிறப்பானதொரு வாழ்க்கையை உருவாக்கிட வேண்டும் .
அரசு உதவியுடன் செயல்படும் 129 முதியோர்களுக்கான இல்லங்களை அவ்வப்போது உயர் அலுவலர்கள் பார்வையிட்டு அந்த இல்லங்கள் அனைத்து வசதிகளுடன் செயல்படுகின்றதையும் முதியவர்கள் உடல்நலத்துடனும் மகிழ்வுடனும் இருப்பதையும் உறுதி செய்திட வேண்டும் . மேலும் அரசு உதவிப் பெறாமல் இயங்கும் அனைத்து முதியோர் இல்லங்களும் பதிவுப்பெற்று அங்கீகாரத்துடன் செயல்பட எல்லாவித நடவடிக்கைகளையும் கவனத்துடன் செயல்படுத்த வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.
பணிபுரியும் மகளிர் விடுதி இல்லாத மாவட்டங்களில் விடுதிகள் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்களில் அவர்களின் பாதுகாப்பினையும், கவனிப்பினையும் உறுதி செய்திட வேண்டும் சட்டபடி பதிவு செய்யப்பட்ட இல்லங்கள் உரிய வசதிகளுடன் செயல்படுகிறதா என்பதை தொடர்ந்து ஆய்வு நடத்திட வேண்டும்.
சமூக சீர்திருத்தத்துறை மூலம் சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை நிலை நாட்டுவதற்கு உரிய ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வுப் பணிகளை மேற் கொள்ளவும், பெண் கல்வியை உறுதி செய்திடவும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமுகச் சீர்திருத்தம் குறித்த பேச்சுப் போட்டிகள் கட்டுரைப் போட்டிகள் நடத்தவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு , நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மைச் செயலாளர் ஜம்பு கல்லோலிகர், சமூக சீர்திருத்த துறையின் முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் ஷர்மா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இயக்குநர் த.இரத்னா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் இயக்குநர் வே.அமுதவல்லி, சமுகப்பாதுகாப்புத் துறை இயக்குநர் ச.வளர்மதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இக்கட்டத்தில் கலந்துக் கொண்டனர்.