திருவண்ணாமலை ஜூலை.21- திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் மாவட்டத்தில் மூடப்பட்ட 8 உழவர் சந்தைகளும் தற்போது திறக்கப்பட்டு விற்பனை நடை பெற்று வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலையில் கொரோனா விதிகள் முறையாக கடை பிடிக்கப்படுகிறதா? என ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று முன் தினம் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அங்குள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியுடன் பொருட்களை விற்கவும் வாங்கவும் வேண்டுமென அறிவுறுத்தினார். முகக்கவசம் அணியாமல் வருபவர்களை உழவர் சந்தைக்குள் அனுமதிக்கக் கூடாது என அதிகாரிக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து விவசாயிகளிடம் குறைகள் ஏதேனும் உள்ளதா என கேட்டறிந்தார். முன்னதாக ஆட்சியர் பா.முருகேஷ் பேருந்து நிலையம் அருகே ரவுண்டானா பகுதிக்கு சென்றார். அங்கு கட்டுமான தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கட்டிட பணிக்காக பேருந்தில் செல்ல காத்திருந்தனர். அவர்களை கண்டதும் தொழிலாளர் கட்டிட பணிக்காக பல்வேறு ஊர்களுக்கு சென்று வருவதால் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது பஜாரில் சைக்கிளில் வந்த ஒரு சிறுமி முகக்கவசம் அணியாமல் இருந்தார். இதைக்கண்ட ஆட்சியர் சிறுமிக்கு முகக்கவசம் அணிவித்து அறிவுரை கூறினார். அப்போது பின்னால் வந்த அவரது பெற்றோர்களிடம் விரைவில் 3வது அலை வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதில் குழந்தைகள் சிறுவர்கள் அதிக பாதிப்புக் குள்ளாவதாக தெரிவித்துள்ளார். எனவே குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில் வெளியில் அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவித்து பாதுகாக்க வேண்டும் என கூறினார். ஆய்வின் போது கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், நகராட்சி ஆணையாளர் இரா.சந்திரா, துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சி.அரக்குமார், ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வேளாண்) சத்தியமூர்த்தி, வேளாண் அலுவலர் (உழவர் சந்தை) தமிழ்ச்செல்வன் உதவி வேளாண் அலுவலர் சிவகுரு, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் எஸ்.மருதாச்சலம், பருதி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட், வினோத்கண்ணா, கார்த்திகேயன் உள்பட பலர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here