ராமநாதபுரம், ஜூலை 23– ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்திவிட்டு துாக்கியெயறிப்படும் பிளாஸ்டிக் (நெகிழித்தாள்) பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் எச்சரித்துள்ளார். இந்நிலையில் இந்த கட்டுப்பாட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகள், ஊரகவளர்ச்சித்துறை (ஊராட்சிகள்) ஆகிய உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னோடியாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் ஒவ்வொரு அலுவலகங்களிலும் “இந்த அலுவலகத்தில் ஒருமுறை உபயோகப்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது” என்ற வாசகங்கள் கொண்ட போஸ்டரை ஒட்டவைத்து சிறப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
தமிழக முதலமைச்சர் கடந்த 5.6.2018 அன்று சட்டமன்றத்தில் பேரவை விதி 110ன் கீழ், சுற்றுச்சூழல் மற்றும் எதிர்கால தலமுறையினரை பாதுகாக்கவும், 1.1.2019 முதல் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் (நெகிழித்தாள்) பொருட்கள் உற்பத்தி, இருப்பு, மற்றும் உபயோகத்திற்கு தமிழ்நாடு முழுவதற்கும் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2.10.2018 காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அரசாணை எண் 84 சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, நாள் 25.6.2018ன் படி ஒரு முறை பயன் படுத்தப் படும் மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவும், இருப்பு வைக்கவும் மற்றும் பயன்படுத்தவும் தடை விதிப்பதென அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தீர்மானம் நிறை வேற்றப் பட்டது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 429 கிராம ஊராட்சிகளிலும் 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஒரு முறை பயன் படுத்தப் படும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் இருப்பு வைப்பதற்கும் மற்றும் பயன்படுத்துவதற்கு தடை விதித்து ஆணையிடப் பட்டுள்ளது.
தமிழக அரசு உத்தரவை உடனடியாக அமுலுக்கு கொண்டு வந்த மாவட்ட ஆட்சித்தலைவர்
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்த படும் பிளாஸ்டிக் பயன் பாட்டிற்கு 1.1.2019 முதல் தடை விதிக்கப் பட்டு உத்தர விடப் பட்டது. ஆனால் ராமநாதபுரம் மாவட்டம் முன்னோடியாக 2018 காந்தி ஜெயந்தி தினத்திலிருந்தே பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடைவிதித்து அதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் உத்தரவிட்டிருந்தார். அவரது உத்தரவின்படி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் தடை உத்தரவை மக்கள் பின்பற்றத் துவுங்கி விட்டனர்.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 244 (2ஏ)ன் கீழ் வழி நடத்தும் முறைகள் வரையறுக்கம் சட்ட திட்டங்களை மீறுதல் தொடர்பாக அபராத தொகை நிர்ணயம் செய்து ஆணையிடப் பட்டுள்ளது.
மேலும் ஊராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை யுத்தரவை மீறி செயல் படுபவர்கள் மீது அபராதம் விதிக்க தேவையான நடவடிக்கை மேற் கொள்ள ஊராட்சி நிர்வாகத்திற்கு அதிகாரம் அளிக்கப் பட்டுள்ளது.
ஊராட்சிகளின் உதவி இயக்குனரின் அதிரடி நடவடிக்கை:
மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின்படி ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன் மாவட்டத்தில் உள்ள 429 கிராம ஊராட்சிகளுக்கும் நேரில் சென்று கிராம ஊராட்சி செயலர்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதற்கு மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என்று ஆலோசனை கூறியதுடன் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூட்டத்தை நடத்தி பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க தனி கவனம் செலுத்த வேண்டும் அதற்காக ஒவ்வொரு ஊராட்சிகளிலும் அடிக்கடி விசிட் செய்து கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
ஒருமுறை பயன் படுத்தி விட்டு துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்தல், ஒரு இடத்திலிருந்து பிற இடத்திற்கு எடுத்து செல்லுதல், விற்பனை மற்றும் வினியோகம் செய்தல் ஆகியவற்றை முதல் முறையாக கண்டறிந்தால் ரூ.25 ஆயிரமும், 2ம் முறையாக கண்டறிந்தால் ரூ.50 ஆயிரமும் 3ம் முறையாக கண்டறிந்தால் ரூ. ஒரு லட்சமும் அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல் ஒருமுறை பயன்படுத்திவிட்டு துாக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பேரங்காடிகள், ஜவுளி நிறுவனங்கள், ஜவுளி கடைகள், பல்நோக்கு வணிக அங்காடிகள் போன்ற பெரிய அளவிலான வணிக நிறுவனங்களில் பயன்படுத்துதல் மற்றும் வினியோகம் செய்தல் ஆகியவற்றை முதல் முறையாக கண்டறி்தால் ரூ.10 ஆயிரம், 2ம் முறையாக கண்டறிந்தால் ரூ.15 ஆயிரம், 3ம் முறையாக கண்டறிந்தால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி கசக்கி யெறியப் படும் பிளாஸ்டிக் பொருட்களை மளிகை கடைகள் மற்றும் மருந்துகங்கள் போன்ற நடுத்தர வணிக நிறுவனங்களில் பயன்படுத்தினால் முதல் முறை கண்டறியப்பட்டால் ரூ.ஆயிரம், 2ம் முறை கண்டறியப்பட்டால் ரூ.2 ஆயிரம், 3ம் முறை கண்டறிந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.;
அதேபோல் ஒருமுறை பயன்படுத்தி விட்டு துாக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை சிறு வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் பயன் படுத்துதல் மற்றும் வினியோாகம் செய்தல் ஆகியவற்றை முதல் முறையாக கண்டறிந்தால் ரூ.100, 2ம் முறையாக கண்டறிந்தால் ரூ.200 3ம் முறை கண்டறிந்தால் ரூ.500ம் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் கடுமையாக எச்சரித்துள்ளார்.
மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டப்பணிகளை ஆய்வு செய்ய போகும்போது திடீர் தீடிரென பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதுடன் அங்குள்ள மக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். இதேபோல் ஊராரட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன் ஆய்வுக்கு செல்லும் போதும் மக்களிடம் பிளாஸ்டிக் விழிப்புணர்வை ஏற்படுத்தி மாசில்லா பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்ப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்பதை மாவட்ட ஆட்சித்தலைவர் மக்களிடம் தவறாமல் எடுத்துரைத்து வருகிறார்.
இதற்கு உதாரணமாக திகழ வேண்டும் என்பதில் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் “இந்த அலுவலகத்தில் ஒருமுறை உபயோகப்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர், ராமநாதபுரம் என்ற விழிப்புணர்வு போஸ்டரை பெரிதாக ஒட்டி வைத்துள்ளனர்.