சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., என்.ஆர். காங்கிரஸ், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள், பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள், என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதி, புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி என கூட்டணியில் மொத்தம் 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன.
மேலும் தே.மு.தி.க.வை அ.திமு.க. கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பா.ம.க. வுக்கு நிகராக 7 தொகுதிகளை தே.மு.தி.க. கேட்டதாக தெரிகிறது.
அ.தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் மீதி 26 தொகுதிகளே இருப்பதால் தே.மு.தி.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்க முயாத நிலை ஏற்பட்டது. எனவே தே.மு.தி.க.வுக்கு 3 தொகுதிகளை ஒதுக்குவதாக பேச்சு நடத்தப்பட்டது. அதை தே.மு.தி.க. ஏற்கவில்லை. எனவே அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது.
இதையடுத்து தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியை தி.மு.க. மேற்கொண்டது. அமெரிக்காவில் சிகிச்சைக்கு சென்று திரும்பிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். அதன் பிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் விஜயகாந்தை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து பேசினார்.
விஜயகாந்திடம் உடல் நலம் விசாரிப்பதற்கு அவர்கள் சென்றாலும் தே.மு.தி.க.வை தி.மு.க,. கூட்டணியில் சேர்க்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகளை தி.மு.க.வாலும் ஒதுக்க முடியவில்லை. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டி உள்ளது.
எனவே தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியை தி.மு.க. கைவிட்டது.
அதே நேரத்தில் தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. உறுதியாக இருந்தது. கூட்டணி கட்சிகளான பா.ஜனதாவும், பா.ம.க.வும் இதை விரும்பியதால் அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வந்தனர். தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளும், 1 மேல் சபை பதவியும் தருவதாக அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தே.மு.தி.க. தரப்பில் 5 தொகுதிகள், ஒரு மேல்சபை பதவி மற்றும் 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் குறிப்பிட்ட அளவு இடங்கள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் பேச்சு வார்த்தை தொடர்ந்து நீடித்து வந்தது. தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள், 1 மேல்சபை பதவி அல்லது 5 தொகுதிகள், 1 மேல் சபை பதவி என்ற ரீதியில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி அமையலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் சேருவது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தனார். நிர்வாகிகளின் கருத்தையும் கேட்டறிந்தார்.
அப்போது அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து போட்டியிட இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இன்றும் விஜயகாந்த் 2-வது நாளாக தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே அ.தி.மு.க. அமைச்சர்கள் விரைவில் விஜயகாந்தை சந்தித்து பேச உள்ளனர். அதன்பிறகு விஜயகாந்துடன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசி கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். இன்னும் ஓரிரு நாளில் கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.
இது தொடர்பாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
தே.மு.தி.க.வுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டணி அமைப்பது தொடர்பாக எந்த இழுபறியும் இல்லை. ஓரிரு நாட்களில் நல்ல முடிவு, சந்தோஷமான முடிவு எட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.