கும்பகோணம், ஜூன். 28 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சாக்கோட்டையில் அப்பகுதியில் மிகவும் பிரபலமான தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் இப் பள்ளியில் அந்நகரைச் சுற்றியுள்ள கிராம பகுதியிலிருந்து சுமார் 1100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பள்ளி தாளாருக்கும், அப்பகுதியில் உள்ள பிரபல தொழிலதிபருக்கும் இடையே இப்பள்ளித் தொடர்பாக கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்ததாகவும், அதனால் பள்ளியில் முகப்பு வாசல் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
அதனால் அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை அழைத்துச்செல்லும் பள்ளி வாகனம் மற்றும் பல்வேறு வாகனங்கள் பள்ளியின் முகப்பு பாதை வழியாக செல்லமுடியாமல் மிகவும் சிரம ப்பட்டு வருவதாக அம்மாணவர்களின் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர் மேலும் இப்பிரச்சினைத் தொடர்பாக அவர்கள் பல்வேறு போராட்டங்களையும் ,மேலும் இப்பிரச்சினைக் குறித்து பலமுறை அப்பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இப்பிரச்சினைக்குறித்து அப்பள்ளி எவ்வித நடவடிக்கையையும் மேற் கொள்ளாமல் அமைதிக் காத்து வந்துள்ளதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் முன்னதாக அதனைக் கண்டித்து பிஜேபி மற்றும் பெற்றோர்கள் சார்பில் கடந்த ஜனவரி மாதம் முதல் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியது. இருப்பினும் இதுவரை அப்பள்ளி முகப்பு வாசல் திறக்கவில்லை என அவர்கள் தெரிவிக்கன்றனர்.
மேலும் இதனைக் கண்டித்து நேற்று காலை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமையில் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து காவல்துறை அனுமதியின்றி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாச்சியார்கோவில் காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து மாவட்ட தலைவர் சதீஷ்குமார், நகர பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், பிரேம்நாத், பசும்பொன் பாண்டியன், அசோகன் பாண்டியன், இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி, உள்ளிட்ட 8 பேர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களை போலீசார் கைது செய்து, எட்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்,
இவ்வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி 8 பேரையும் வருகிற 11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அந்த எட்டு நபர்களுக்கும் அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்படு, பாதுகாப்பாக புதுக்கோட்டை சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் எட்டு பேர்களின் கைதைக் கண்டித்து திரளான பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் நீதிமன்றம் முன்பு கூடியதால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது தொடர்ந்து ஏராளமான காவல் துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கைது நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று மாலை மிகப்பெரிய போராட்டம் நடத்தப் போவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.