திருவாரூர், மே. 08 –

திருவாரூர் மாவட்டம் மூன்று போகம் விளையக்கூடிய விவசாய பூமியாகும், மேலும் இப்பகுதி பெரும்பான்மையாக ஆற்றுப் பாசன வசதிக் கொண்டதாகும். இதில் அப்பகுதி விவசாயிகள் சம்பா மற்றும் குறுவை கால சாகுபடியாக நெல் பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

மேலும் கோடைக்கால பயிராக அப்பகுதி பெரும் நிலந்தார்கள் கிணற்றுப் பாசனத்தை பயன்படுத்தி மூன்றாவது போகமாக அவர்கள் நிலத்தில் நெல் பயிரிடுவதும் ஏனைய சிறு, குறு விவசாயிகள் அதிக தண்ணீர் தேவைப்படாத பயிர்களான எள் மற்றும் பலவேறு பயிர்வகை சாகுபடிகளை அப்பகுதியில் ஆண்டு தோறும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இம்மாவட்டத்தில் கோடைக்கால பயிராக சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடப்பு ஆண்டில் அப்பகுதி சிறுகுறு விவசாயிகள் அதிக தண்ணீர் தேவைப்படாத பயிரான எள் பயிரை சாகுபடி செய்திருந்தனர். மேலும் அவர்களுக்கு சரியான ஆலோசனை வழங்கப்படாததால், அவர்கள் பயிரிட்ட எள் பயிருக்கு காப்பீடு செலுத்தாமல் இருந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தொடர்ந்து நான்கு நாட்கள் பெய்த கோடைகால மழையினால் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த எள் பயிர்கள் மழை நீரில் நனைந்து  கடுமையான பாதிப்புக்குள்ளாகி அப்பயிர்கள் வாடிய நிலையில் உள்ளதாக அப்பகுதி சிறு குறு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவ் விவசாயிகள் தெரிவிக்கும் போது ஏக்கர் ஒன்றிற்கு எள் சாகுபடிக்காக இரண்டு முறை உழவு எள் விதை , பாத்தி கட்டி வாய்க்கால் இழுத்தல், உரம் ,மருந்து என சுமார் 7000 ரூபாய்க்கு மேலாக செலவு செய்துள்ளா தாகவும், தற்போது ஏற்பட்டுள்ள இப்பதிப்பினால் செலவிட்ட தொகைக்கூட திரும்ப கிடைக்காத நிலையில் தாங்கள் கவலையில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆதலால், திருவாரூர் மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் உடனடியாக மாவட்டம் முழுவதும் எள் சாகுபடி பாதிப்பை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு அச்சிறு மற்றும் குறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here