திருவாரூர். ஜூன். 11 –
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், அரசவனங்காடு கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீமதிலழகி காளியம்மன் ஆலயத்தில் 208 பேர் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி பூஜை செய்தனர்.
முதல் நாள் கணபதி பூஜையுடன் துவங்கி இத்திருவிழா அன்று இரவு நாடாகுடி இராமலிங்கம் குழுவிரின் காத்தவராயன் கதை நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வில் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று, மதியம் அன்னப்படையல் எனும் பல்லயம் போடும் நிகழ்ச்சியுடன் மாலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு துவங்கி 1008 ஸ்ரீலலிதா சகஸ்ரநாம அர்ச்சனையாக புஷ்பம் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யும் வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து வானவேடிக்கையுடன் மஹா தீபாராதனை நடைபெற்றது. பூஜை முடிந்தவுடன் சுமங்கலி பெண்கள் குங்குமத்தை அனைவரது நெற்றியில் இட்டு ஆசிர்வாதம் வழங்கினர். மேலும், அனைவருக்கும் அருட்பிரசாதங்களும் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
விழாவில் திருவிளக்கு வழிபாட்டினை கல்யாணராமன் மற்றும் முத்துஸ்வாமி சிவாச்சாரியார் கிருஷ்ணமூர்த்தி குருக்கள் ஆகியோர் நடத்தி வைத்தனர். இவ்விழா ஏற்பாட்டை அரசவனங்காடு கிராம பொதுமக்கள் மற்றும் பக்தகோடிகள் சிறப்பாக செய்திருந்தனர்.