தஞ்சாவூர், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
உடல் ஆரோக்கியத்திற்காகவும் மனதை ஒருநிலைப் படுத்துவதற்காகவும் பள்ளி மாணவர்களுக்கு இலவச குதிரை ஓட்ட பயிற்சி முகாம் இன்று முதல் பட்டுக்கோட்டையில் துவங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தஞ்சாவூர் பைபாஸ் சாலை அருகே உள்ள பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாள் இலவச குதிரை ஓட்ட பயிற்சி முகாம் இன்று துவங்கியது.
பட்டுக்கோட்டை எஸ் பி டி ஹார்ஸ் ரைடிங் ஸ்கூல் மற்றும் புதுக்கோட்டை உள்ளூர் பிரில்லியண்ட் சிபிஎஸ்சி பள்ளி இணைந்து நடத்திய இந்த இலவச முகாம் இன்று துவங்கி நாளை வரை நடைபெறுகிறது.
பள்ளி மாணவர்களின் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க குதிரை ஓட்ட பயிற்சியின் நன்மைகளைப் பற்றி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த முகாமை பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் எஸ் டி எஸ் செல்வம் துவக்கி வைத்தார்.
முன்னதாக எஸ் பி டி ஹார்ஸ் ரைடிங் ஸ்கூலின் உரிமையாளர் தமிழரசன் பேசுகையில் தமிழ்நாட்டிலேயே சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களான நான்கு இடங்களில் தான் இந்த குதிரை ஓட்ட பயிற்சி நடைபெறுகிறது எனவும் அதில் பட்டுக்கோட்டையும் ஒன்று எனக் குறிப்பிட்டார். மேலும் இந்த குதிரை ஓட்ட பயிற்சியினால் உடலில் உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் சீராகச் சென்று உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துவது பற்றி மாணவர்களிடத்தில் விளக்கினார்.
இந்நிகழ்வில் பிரில்லியன்ட் சிபிஎஸ்சி பள்ளி தாளாளர் சுப்பிரமணியன் மற்றும் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.























