வாலாஜாபாத், ஆக. 05 –
நேற்று வாலாஜாபாத் அடுத்துள்ள நத்தாநல்லூர் கிராமத்தில் ரூ.17 லட்சம் மதிப்பில் 3 கி.மீ.தூரத்திற்கு பைப்லைன் அமைத்து பாலாற்று குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதனை உத்திர மேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் அடுத்துள்ளது நந்தாநல்லூர் கிராமம். இக்கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பல ஆண்டு காலமாக அப்பகுதியில் குடிநீர் பிரச்சினை இருந்து வந்துள்ளது. அதனை போக்க அப்பகுதி மக்கள் பாலாற்றில் இருந்து பைப் லைன் மூலம் குடிநீர் வழங்கிட வேண்டும் என சுமார் 25 ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.
அக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் அதற்கான திட்டம் வகுத்து ரூ. 17 இலட்சம் மதிப்பீட்டில் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு பைப் லைன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட பாலாற்று நீரினை மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் சேமித்து பின்பு அதனை குழாய் மூலம் அப்பகுதி மக்களுக்கு வழங்கிட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தற்சமயம் அப்பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து அக்குடிநீரை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் குடிநீர் குழாயினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என திரளானவர்கள் கலந்துக்கொண்டனர்.




















