திருவரூர், ஆக. 03 –

திருவாரூர் மாவட்டம், குடவாசல் காவல் சரகம், 19 புதுக்குடி ஊராட்சியில் சொத்து சம்பந்தமாக சகோதர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதனை விலக்கி விடச் சென்ற அவர்களது மைத்துனர் தாக்குதலுக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் குடவாசல் காவல்நிலையத்தில் இதனைக் கொலை வழக்காக பதிவு செய்யாமல் சந்தேக மரணமாக பதிவு செய்ததாக கூறி கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் காவல் சரகம், 19 புதுக்குடி 3ஆம் கட்டளை மாதா கோயில் தெருவை சேர்ந்தவர்   வின்சென்ட்ராஜா (43). இவர், தற்சமயம் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது மூத்த சகோதரர் மரியசெல்வம் (53) இடையே சொத்து சம்பந்தமாக தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆவண சான்று ஒன்று பெறுவதற்காக, சென்னையில் இருந்து வின்சென்ட்ராஜா புதுக்குடி ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா வீட்டிற்கு வந்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த அவரது மூத்த சகோதரர் மரியசெல்வம் மற்றும் அவரது மனைவி ஜோதிமேரியும் (48) இணைந்து வின்சென்ட்ராஜாவிடம் தகராறு செய்துள்ளனர். இதில் வாய்த்தகராறு முற்றிய நிலையில் கைகலப்பாகியுள்ளது.

அப்போது மரியசெல்வமும், ஜோதிமேரியும் இணைந்து வின்சென்ட்ராஜாவை கட்டையால் கையில் தாக்கியுள்ளனர்.

இதனை தடுக்க முயன்ற வின்சென்ட் ராஜாவின் அக்கா பாத்தியா மேரியின் கணவரான ஜான்கென்னடி (55) என்பவர் தாக்கப்பட்டுள்ளார். தாக்கப்பட்டதில் நிலைத்தடுமாறி ஜான்கென்னடி கீழே விழுந்து மயக்கம் அடைந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள நாச்சியார்கோயில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதித்த போது, ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மரியசெல்வம் மற்றும் அவரது மனைவி ஜோதிமேரியையும் கைது செய்தனர்.

ஜான்கென்னடி உயிரிழப்பை சந்தேக மரணமாகவும், வின்சென்ட் ராஜா தாக்குதலுக்குள்ளானதை மற்றொரு அடிதடி வழக்காகவும் பதிவு செய்ததாக தெரிகிறது. தொடர்ந்து நேற்று உடற்கூறாய்வு நடைபெற்று முடிந்த நிலையில், இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும், ஜான்கென்னடி கொலை வழக்கிலேயே வின்சென்ட்ராஜா காயமுற்ற சம்பவத்தையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று முன்தினம் மாலை வரை ஜான்கென்னடி உடலை வாங்க முடியாது என மறுத்து சாலை மறியல் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் தலைமையில், தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் புதன்கிழமை காலை சம்மந்தப்பட்ட மாற்றம் இவ்வழக்கில் செய்ய போலீஸார் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து, அமைதியாக ஜான்கென்னடியின் உடலை அடக்கம் செய்ய எடுத்துச்சென்றனர். இதனால் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here