திருவாரூர், ஏப். 08 –
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப்பல்கலைக்கழக மாணவிகள் இருவர் மீது கஞ்சா போதை கும்பல் நடத்திய கொடூர தாக்குதலில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். அதனைத்தொடர்ந்து அவ்விரு மாணவிகளையும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூரை அடுத்துள்ள நீலக்குடியில் தமிழ்நாடு மத்தியப்பல்கலைக்கழகத்தில் சுமார் 3000 த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து இங்கு வந்து கல்வி பயின்று வருகின்றனர். மேலும், இப்பல்கலைக்கழக நிர்வாகம் விடுதி மாணவர்களுக்காக செயல்படுத்திவரும் உணவகத்தில் தரமற்ற சாப்பாடு வழங்கப்படுதல், சுகாதாரமற்ற நிலை போன்றவற்றால் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் அருகில் உள்ள கங்களாஞ்சேரி கடைவீதியில் உள்ள உணவகத்திற்கு தினசரி வந்து உணவருந்தி வருகின்றனர். மேலும் இப்பிரச்சினைத் தொடர்பாக அப்பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த மாதம் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று பல்கலைக்கழகத்தில் பயிலும் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த முதலாமாண்டு மாணவி ஒருவரும், சென்னையை சேர்ந்த இரண்டாமாண்டு மாணவி ….. என்ற மாணவியும் சேர்ந்து கங்களாஞ்சேரி பகுதியில் உள்ள ATM-மில் பணம் எடுத்துக்கொண்டு அங்குள்ள தனியார் உணவகத்திற்கு சுமார் இரவு 8.30 மணியளவில் சாப்பிட சென்றுள்ளனர்.
அப்போது அங்கு கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த வண்டாம்பாளை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் செல்வதுரை, வணிகராஜ் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் உணவகத்தின் உள்ளே நுழைந்து மாணவிகளிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு உணவகத்தில் இருந்த பொருட்களைக்கொண்டு அவர்கள் இருவரையும் கடுமையாக தாக்கியதோடு, உணவகத்தையும் அடித்து நொறுக்கி சூரையாடியதாக தகவல் தெரிவிக்கிறது.
அதனைத்தொடர்ந்து அக்கஞ்சா கும்பலால் தாக்குதலில் படுகாயம் அடைந்த மாணவிகள் இருவரையும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருக்கண்ணபுரம் போலீஸார் மாணவிகளை தாக்கி உணவத்தை சூரையாடிய செல்வராஜ், வந்தராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய கஞ்சா கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா போதைப்பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் பெருகிவருவதால் தினசரி வழிப்பறி சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகரித்த வண்ணம் இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.