திருவண்ணாமலை, அக்.9-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் கிராம குடிநீர் திட்ட கோட்டம் சார்பாக மழைநீர் சேமிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அதி நவீன மின்னணு வீடியோ பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சரின் ஆலோசனைகளின் படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வழியாக தமிழகம் முழுவதும் காணொளி வழியாக மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்து அனைத்து கிராம மற்றும் நகர மக்களுக்கு 37 மாவட்டத்திற்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குதல், பராமரித்தல், பருவகால மழைக்கு முன் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தும் விளக்கப் படமாக காண்பிக்கப் படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், மாவட்ட குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக செயற்பொறியாளர் அ. மோகன், துணை நிலநீர் வல்லுநர் சி. ராமன், உதவி நிர்வாக பொறியாளர்கள் சி. ஏழுமலை, வி. பாஸ்கரன், உதவி நிலநீர் வல்லுநர், ச.பரிதிமாற்கலைஞர், உதவி பொறியாளர் கே.சுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.