வேளாண் பயன்பாட்டிற்கு தேவையான இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு வேளாண் கூட்டுறவு சங்கத்தில் எடுத்து பயன் படுத்திக் கொள்ளுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் உழவர்களுக்கு அறிவுறுத்தல்
திருவண்ணாமலை, ஜன. 24 –
விவசாயிகளுக்கு குறைவான வாடகையில் வேளாண் இயந்திரங்கள்
தமிழ்நாடு அரசு, வேளாண் பெருமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள வேலையாட்கள் பற்றாக்குறையினை சமாளித்து, வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து முடிப்பதற்காக, வேளாண்மைப் பொறியியல் துறை பல்வேறு புதிய, நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மிகுந்த பயனைத் தரக்கூடிய வேளாண் இயந்திரங்களான 2-மண் தள்ளும் இயந்திரங்கள், 6-டிராக்டர்கள், 2-டயர் வகை மண் அள்ளும் இயந்திரங்கள் இருப்பில் உள்ளன.
மேலும், நிலம் சமன் செய்தல், உயர் பாத்தி அமைத்து, விதைத்தல், கரும்பு, காய்கறி நாற்று நடவு செய்தல், உரத்துடன் விதை விதைத்தல், களை எடுத்தல், அறுவடை, பல்வேறு பயிர்களை கதிரடித்தல், வைக்கோல் கட்டுதல், நிலத்தில் நிலக்கடலை பயிரை தோண்டி எடுத்தல், உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கும் டிராக்டரால் இயங்கக்கூடிய இயந்திரங்களும் வேளாண் பொறியியல் துறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்று, டிராக்டரால் இயங்கக்கூடிய அனைத்து கருவிகளும் டிராக்டருடன் மணிக்கு ரூ.400 என்ற குறைந்த வாடகை அடிப்படையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாடகைக்கு வழங்கப்படுகின்றன.
மண் அள்ளுவதற்கும், பண்ணைக் குட்டைகள் அமைத்திடவும், புதர்களை அகற்றவும், சக்கர வகை மண் அள்ளும் இயந்திரங்கள் மணிக்கு ரூ.760 க்கும் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு டிக்குடன் கூடிய தேங்காய் பறிக்கும் கருவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 50 அடி உயரம் வரை உள்ள மரங்களில் இருந்து தேங்காய்களைப் பறிக்கவும் மற்றும் தென்னை மரத்தினை பராமரிக்கும் பணிகளுக்கும் உபயோகப்படுத்த இயலும். இது நான்கு திசைகளிலும் சூழன்று இயங்கக் கூடியது. ஒரு மணி நேரத்திற்கு வாடகைத் தொகை டீசல் உட்பட ரூ.650 (ரூபாய் அறுநூற்று ஐம்பது மட்டும்) ஆகும். எனவே தென்னை மரம் வளர்க்கும் விவசாயிகள் இதனை உபயோகப்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே, மேலே குறிப்பிட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறையின் திருவண்ணாமலை மற்றும் ஆரணி உபகோட்ட அலுவலகத்தினை அணுகி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு உதவி செயற்பொறியாளர்(வே.பொ) திருவண்ணாமலை (9443492538) மற்றும் உதவி செயற்பொறியாளர்(வே.பொ) ஆரணி (9442975898) ஆகிய அலைபேசி எண்களை தொடர்புக்கொள்ளுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ். தெரிவித்துள்ள்ளார்.