மீஞ்சூர், அக். 03 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில்நிலையம் அருகே காட்டூர் சாலையில் தொடர்வண்டி இருப்புப் பாதை கதவு உள்ளது. இதனைக் கடந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவ்வழியாக கடந்து செல்கின்றனர். மேலும் அவ்வழியாக தொடர்வண்டிகள் அடிக்கடி வந்து செல்வதால் உரிய நேரத்திற்கு இருப்பு பாதை கதவுகள் திறக்கப்படாமல் வெகு நேர காத்திருப்புக்கு பின்னரே பொதுமக்கள் அவ்வழியாக சென்று வர முடிகிறது. இதனால் அப்பகுதியில் தொடர்வண்டி மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைகள் பல ஆண்டுகளாக எழுப்பி வந்த நிலையில் அதற்கான பணிகள் கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 55 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு நீண்ட இழிபறிக்கு பின்னர் 2021 ஆம் ஆண்டு மேம்பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு அப்பணிகள் நிறைவு அடைந்து ஆறு மாதத்திற்கு மேல் ஆகிறது.

இந்த நிலையில் அதற்கான இணைப்புச் சாலை அமைக்க உரிய இழப்பீடு வழங்கி தனியார் இடத்தை கையகப்படுத்தி தர மாநில அரசின் வருவாய் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வரும் நிலையில், திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் மேம்பால பணிகளை ஆய்வு செய்வதற்காக வந்தனர். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமாரை முற்றுகையிட்ட தொடர்வண்டி பயணிகள் ஏற்கனவே நீங்கள் மூன்று முறை ஆய்வு செய்தும் மேம்பாலப் பணிகளை நிறைவு செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது,

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் முடிந்தும் இணைப்புச் சாலை அமைப்பதற்கான இடத்தை கையகப்படுத்தி தர வருவாய் கோட்டாட்சியரும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காததால் பணிகள் முடங்கியுள்ளதாகவும், இதுகுறித்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முறையிட போவதாகவும், அதன் பின்பும் இணைப்புச் சாலை அமைக்க நிலத்தை கையகப்படுத்தி தராவிட்டால் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை இடித்து தள்ளுங்கள் என கோரிக்கை வைக்க வேண்டியது வரும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர். மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ். நகர கழக செயலாளர் தமிழ்உதயன். நெடுஞ்சாலைத்துறை மண்டலம் பொறியாளர்கள் எம் ஜெயக்குமார். ஆர். ஜெயமூர்த்தி. வியாபாரிகள் சங்க மாவட்ட பொறுப்பாளர் ஷேக்அகமது. உள்ளிட்ட திரளான பொதுமக்கள் உடன் இருந்தனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here