கும்பகோணம், ஏப். 02 –
மகாபிரளத்தின் போது அமிர்த குடம் உடைந்த போது வில்லம் விழுந்த இடத்தில் எழுந்தருளி ஸ்ரீ வில்வனேசர் எனும் திருநாமம் பெற்று பின்னர் உலக பாரத்தை தாங்க சக்தியற்ற நாகராஜன் ஸ்ரீ வில்வனேசரை பூஜித்து அனுக்கிரஹம் கிடைத்ததால் ஸ்ரீ நாகராஜன் வேண்டுகோளுக்கு இணங்க நாககேஸ்வரர் என திருநாமம் பெற்றார் தாயார் பிரஹந்நாயகி, சூரியன் தனது கிரஹணம் மழுங்கி கலங்கி நின்ற போது அசரீரியின்படி சூரிய தீர்த்த்தத்தில் நீராடி ஸ்ரீ நாகேஸ்வர சுவாமியை வழிப்பட்டு பேறு பெற்றார் என இத்திருத்தல வரலாறு தெரிவிக்கிறது.
மேலும் இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாட்களிலும் தனது சூரிய கதிர்களால் அருள்மிகு ஸ்ரீநாகேஸ்வரரை சூரியபகவான் வழிபடுவதை இன்றும் இத்திருதலத்தில் காணலாம்.
மேலும் இத்திருத்தலத்தில் சூரியனுக்கென்று தனி சன்னதியும் உள்ளது சூரியனுக்கு ஒளி கொடுத்ததால் கும்பகோணம் நகருக்கு பாஸ்கர சேஷத்திரம் என பெயர் பெற்றதாகவும் அத்திருத்தல வரலாறு தெரிவிக்கிறது.
மேலும் பல்வேறு சிறப்பு பெற்ற இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர பெருவிழா, 13 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதுபோலவே, இவ்வாண்டும் இவ்விழா கடந்த 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும், பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று வருகிறது.
மேலும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்கியாக, 7ம் நாளான நேற்று உற்சவர் நாகேஸ்வரசுவாமிக்கும், பிரகன்நாயகியம்பிகைக்கும், திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, சீர்வரிசைகள் சமர்பித்தலும், மாலை மாற்றும் வைபவமும் பின்னர் ஊஞ்சலில்; நலுங்கு உற்சவமும் நடைபெற்றதை தொடர்ந்து, சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் ஜபிக்க, யாகம் வளர்த்து, நாதஸ்வர மேள தாளம் முழங்க, உதிரி மலர்கள் தூவி, மங்கல ஞான் பூட்டும் வைபவமும் நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்
தொடர்ந்து விழாவின் 9ம் நாளான 3ம் தேதி திங்கட்கிழமை காலை திருத்தேரோட்டமும் 10ம் நாளான 4ம் தேதி செவ்வாய்க்கிழமை மகாமக குளத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, பங்குனி உத்திர தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.